கென்யாவுக்கு கொடுக்கும் நிதியை விவசாயிகளுக்கு கொடுக்கலாமே என்ற நிருபர்.. தேச துரோகி என்ற எச்.ராஜா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கென்யாவுக்கு கொடுக்கும் நிதியை விவசாயிகளுக்கு கொடுக்கலாமே என்ற நிருபர்.. தேச துரோகி என்ற எச்.ராஜா

சென்னை:பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கூடாது. அவ்வாறு விமர்சிப்பவர்கள் தேச துரோகிகள் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீனவர் பிரச்சினை, நியூட்ரினோ ஆய்வகம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜக அரசு பாராமுகமாக உள்ளதாக தமிழகமே குற்றம்சாட்டி வருகிறது.

கடும் வறட்சியால் தற்கொலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவதால் வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்கக் கோரியும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் விவசாயிகள் கடந்த 17 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் எதிர்ப்பையும் மீறி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் போராட்டத்தை ஒத்தி வைத்திருந்த நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுசட்டுக் கொல்லப்படும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து இலங்கை அரசுடன் பேச்சுவாரத்தை நடத்தாமல் அந்த நாட்டுடன் மோடி அரசு நட்பு பாராட்டி வருகிறது. இதனால் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

 

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்தால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று பூவுலக நண்பர்கள் அமைப்பினர் தென்மண்டல் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து அந்த சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வகத்தை கைவிடும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என்றும் தேனி மாவட்டத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தது.

 

 

மத்திய அரசின் செயல்பாடுகளால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. மோடி மீது கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை ஹெச். ராஜா சந்தித்தார். அப்போது விவசாயிகள் நிவாரணம் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது ஏன், கென்யா நாட்டுக்கு பல ஆயிரம் கோடி நிதி உதவி செய்துவிட்டு தமிழகத்திற்கு இவ்வளவு குறைந்த வறட்சி நிவாரணம் கொடுத்துள்ளீர்களே என்று கேள்வி எழுப்பிய நிருபரிடம், வெளிநாட்டு கொள்கைக்கான நிதி உதவியையும், உள்நாட்டு நிதி ஒதுக்கீடையும் ஒப்பிடுவது சரியில்லை என்றார்.

 

 

திரும்ப திரும்ப நிருபர் அதே கேள்வியை கேட்கவே, எப்போதும் மோடியை எதிர்க்கும் மனநிலையிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தேச துரோகி என்று நிருபரை பார்த்து ஆவேசமாக கூறினார் ஹெச்.ராஜா. அதற்கு நிருபர், நான் வரி செலுத்துகிறேன், அந்த பணத்தை தாங்கள் என்றுதானே கேட்கிறோம் என்றார், அதற்கு ராஜா, நீங்கள் செலுத்திய வரி பணத்தை நானே பாக்கெட்டிலிருந்து திருப்பி செலுத்தி விடுகிறேன் என்று ஆவேசமாக தெரிவித்தார். ஆனால் நிருபரோ, நான் செலுத்திய வரியை பற்றி பேசவில்லை. ஒட்டுமொத்த விவசாயிகளும்தானே வரி செலுத்தியுள்ளனர் என்றார்.

மூலக்கதை