நவீன கொள்ளைக் கூடாரங்களான சுங்கச் சாவடிகள் ஏப்.1ல் முற்றுகை.. வேல்முருகன் அறிவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நவீன கொள்ளைக் கூடாரங்களான சுங்கச் சாவடிகள் ஏப்.1ல் முற்றுகை.. வேல்முருகன் அறிவிப்பு

சென்னை: சாலை வரி என்ற பெயரில் சுங்கச் சாவடிகள் நடத்தும் சட்டப்பூர்வ வழிப்பறியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளின் முன்பும் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு தமிழக மக்களின் ஏகோபித்த பேராதரவினை வேண்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்தச் சுங்கச் சாவடி முறையினையே ஒழிக்க வேண்டும் என்ற நியாயமான நோக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே போராடி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இதனால் கைதுகள், பொய்வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதைக் கண்டெல்லாம் அஞ்சாமல் இலக்கினை அடைய நெஞ்சு நிமிர்த்தி இந்த ஏப்ரல் 1ந் தேதியும் போராட்ட களம் காண்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இந்தப் போராட்டம் காலத்தின் கட்டாயம் என்ற நிலையில் அதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்குச் சொல்ல வேண்டியதும் நமது கடமையாகிறது. நாடு முழுவதும் சுமார் 33 ஆயிரம் கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் உள்ளன. சாலைகளின் திட்டச் செலவு மற்றும் பராமரிப்பு பணிக்காக 374 சுங்கச்சாவடிகள் அமைத்து, பேருந்து, கார், லாரி, வேன் உள்ளிட்ட பலவித வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கச் சாவடி ஒப்பந்ததாரர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்துப் பராமரிக்க வேண்டும்; சுங்கச்சாவடியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும். சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கி.மீ தூரம் வரை உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். அதற்காக வாகனங்களுக்கு மாதாந்தர சீட்டு வழங்க வேண்டும்.

இப்படி பல்வேறு விதிமுறைகள் இந்த சுங்கச் சாவடி முறையில் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பெரும்பாலான விதிகள் நடைமுறைக்கே வரவில்லை என்பதுதான் வேதனை தரும் உண்மை. எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு, வாகன ஓட்டிகளிடம் காசு பறிப்பது ஒன்றைத்தான் தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன இந்தச் சுங்கச் சாவடிகள்.

1997ஆம் ஆண்டு சுங்கச்சாவடி சட்டப்படி, 80 கி.மீ தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடிதான் இருக்க வேண்டும். ஆனால் எங்கு பார்த்தாலும் சுங்கச் சாவடிகள் என்று ஆகிவிட்டது. உள்ளூர் வண்டிகளுக்கு தனியாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் என்கிறது விதி. நெடுஞ்சாலைகளையே நல்லபடியாக அமைக்கவில்லை. அப்படியிருக்க உள்ளூருக்கு ஏன் சாலை போடப்போகிறார்கள்?

நாள் ஒன்றுக்கு ஒரே முறைதான் கட்டணம். பஸ், கார், இலகு ரக வாகனம், கனரக வாகனம் என 4 வகையாகப் பிரித்து கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் கண்டபடி அவர்கள் போக்கில்தான் வசூலிக்கிறார்கள். சாலை பராமரிப்பு கட்டணத்தை ஆண்டுக்கு 12 சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் 21 சதவீதம்கூட உயர்த்தியுள்ளன சில சாவடிகள்.

சுங்கச்சாவடிகள் அருகே விபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். அப்படி மருத்துவர்களை யாராவது பார்த்திருக்கிறீர்களா சொல்லுங்கள்.

தமிழகத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்கச் சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும் 18 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. அனைத்திலும் கட்டணம் வசூலிப்பது தனியார்தான். எல் அண்ட் டி, எம்விஆர், ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் தான். பாவம் இவர்களுக்கு கைவசம் எந்தத் தொழிலும் இல்லை போலும்? வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சுங்கச் சாவடி கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்றும் விதி சொல்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக கட்டணத்தை கூடுதலாக்குவதுதான் நடக்கிறது.

தமிழக சுங்கச் சாவடிகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.14,200 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் ரூ.9,600 கோடி அளவுக்கே வருவாய் என பொய்க் கணக்குதான் காட்டப்படுகிறது. இது சத்தியம். சுங்கச் சாவடிகளின் கொள்ளைக்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். தலைவாசல் - தர்மபுரி பேருந்துக் கட்டணம் 100 ரூபாய். ஆனால் வழியில் சுங்கச் சாவடிக்கு அழ வேண்டியிருப்பது 450 ரூபாய் வரை ஆகிறது. இருவழிப் பயணத்துக்கு கார் ஒன்றுக்கு 115 ரூபாய் சுங்கக் கட்டணம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சாலைகளை ஒழுங்காகப் பராமரிப்பதே கிடையாது. ஆனால் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகிறது. இது மறைமுகமாக விலைவாசி உயர்வுக்குத்தான் வழிவகுக்கும். வாகனம் வாங்குகிறபோதே வாழ்நாள் முழுவதற்குமான சாலை வரி என்று வசூலித்துவிடுகிறார்கள். பிறகு வாகனத்துக்குப் போடுகிற பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 2 ரூபாய் சாலை வரியாக விதிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலையேறும் போதெல்லாம் நாம் வரி கட்டுகிறோமே. அண்மையில்கூட தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை உயர்த்தியது.

இப்படி மக்கள் இந்த நாட்டிலுள்ள எல்லா சாலைகளுக்கும் சேர்த்துத்தான் வாழ்நாள் முழுவதும் வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க சுங்கச் சாவடி அமைத்து பிரத்யேகமாக சாலைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்குக் காரணம் என்ன? காரணம், அது சாலைகளுக்காக இல்லை. பெருமுதலாளிகளுக்காகவும் பன்னாட்டு அளவிலான அவர்களின் பெருநிறுவனங்களுக்காகவும் தான்.

ஏழைகளுக்காக ஆட்சி நடத்தினால் என்ன கிடைக்கும்?.தேர்தலுக்குப் பணம் வேண்டுமே? அதை யார் தருவார்? பெருமுதலாளிகளிடம் இருந்துதானே பெற முடியும்? அப்படியென்றால் அவர்கள் வளர வேண்டும்தானே? அதற்குத்தான் இந்த சுங்கச் சாவடி போன்ற ஏற்பாடுகள். இந்த சுங்கச் சாவடிகள் மூலம் அதாவது அரசின் அனுமதியுடன் அந்தப் பெருமுதலாளிகள் நம்மை ஒட்டச் சுரண்டுகிறார்கள். நாம் வாக்களித்து நமக்கு சேவை செய்வதற்காக பதவியில் இருத்தினோம் அல்லவா, அவர்களே நமக்கு கேடு செய்கிறார்கள்.

அவர்களிடம், ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள், இப்படி சுங்கச் சாவடி போன்று தீமையான காரியங்களைச் செய்யாதீர்கள் என்று சொல்லவே ஏப்ரல் 1ந் தேதியன்று தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடி முற்றுகைப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்துகிறது. இதற்கு தமிழக மக்கள் தங்கள் பேராதரவினை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

மூலக்கதை