சின்னம்மா என்று அழைத்து முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியவர் ஓபிஎஸ்.. மாஜி நண்பரை விளாசும் தீபா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சின்னம்மா என்று அழைத்து முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியவர் ஓபிஎஸ்.. மாஜி நண்பரை விளாசும் தீபா

சென்னை: முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை சின்னம்மா என்று அழைத்து அந்த பதவிக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று தீபா தெரிவித்தார்.

ஆர்.கே. நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் கடுமையாக போராடி வருகின்றன.

இதனால் தினகரன் தரப்பை சவிர்த்து ஏனைய அனைவரும் ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்தே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றபோது ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அப்போது எத்தேச்சையாக வந்த தீபாவை சந்தித்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுடன் இரு கரங்களாக செயல்படுவோம் என்று தீபா தெரிவித்தார்.

இந்த நிலையில் பதவி, அதிகாரம் ஆகியவற்றால் ஓபிஎஸ்ஸுக்கும், தீபாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று அவர் எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் தீபா போட்டியிடவுள்ளார்.பல்வேறு களேபரங்களுக்கு இடையில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு, படகு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் தீபா திறந்து வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு தீர்ப்பு அளிக்கும் வகையில் இந்த இடைத்தேர்தல் அமையும். சசிகலாவின் பினாமி ஆட்சியை மக்களே தூக்கி எறிவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா எழுதிக் கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் ஓபிஎஸ்.

தமிழக முதல்வராக இருந்து கொண்டு சசிகலாவை சின்னம்மா என்று அழைத்ததன் மூலம் அப்பதவிக்கே ஓபிஎஸ் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார். ஆட்சியையும், கட்சியையும் நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று சசிகலாவிடம் மன்றாடியவர் மதுசூதனன். பதவி பறிபோனதும் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் திரும்பிவிட்டார். சசிகலாவும் பதவி வேண்டாம், கட்சி வேண்டாம் என்று கூறிவிட்டு முதல்வராக பாடுபட்டார். எனவே இருதரப்பினரிம் பதவி மீதே குறியாக உள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் பதவிக்காக போட்டி போட்டுக் கொண்டு எம்ஜிஆராலும், ஜெயலலிதாவாலும் கட்டி காக்கப்பட்ட இரட்டை இலையை முடக்கும் அளவுக்கு செய்துவிட்டனர். எனவே குடும்ப ஆட்சியில் சி்க்கியுள்ள கட்சியையும், ஆட்சியையும், சின்னத்தையும் மீட்கவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் அவர்.

மூலக்கதை