ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராகிறார் ஜார்ஜ்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராகிறார் ஜார்ஜ்?

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதே நம்பிக்கையில்தான் அவரும் இருக்கிறாராம்.

ஆர்.கே.நகர் தேர்தலை மையப்படுத்தி சென்னை கமிஷனர் ஜார்ஜ் தூக்கப்பட்டார். அவருக்கு மாற்று பணியிடம் ஒதுக்கப்படவில்லை. அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் மீண்டும் கமிஷனராக நியமிக்கப்படவிருக்கிறேன். அதனால் தான் காத்திருப்பில் இருக்கிறேன் என நம்பிக்கையாக சொல்லி வருகிறாராம் அவர்.

இது ஐ.பி.எஸ்.தரப்பில் பரவ, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்கிற புகாரின் பேரில் தான் மாற்றப்படுகிறார். மீண்டும் அவருக்கே கமிஷனர் பதவி தருவது மற்ற அதிகாரிகளை காயப்படுத்துகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்களாம்.

ஜார்ஜை விட்டால் கமிஷனர் பதவிக்கு வேறு அதிகாரிகளே இல்லையா? என ஆதங்கப்படும் ஐ.பி.எஸ்.வட்டாரம், தங்களது ஆதங்கத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி வருகிறார்களாம். அதேசமயம், இந்த தடைகளை உடைத்து மீண்டும் கமிஷனராக உட்காரும் திறமை ஜார்ஜ்க்கு உண்டு என் கிறார்கள் அவருக்கு நெருக்கமான ஐ.ஜி.க்கள் .

தேர்தல் நேரங்களில் ஜார்ஜ் பதவியிடம் மாற்றப்படுவது இது மூன்றாவது முறையாகும். எப்போதுமே ஆளும் தரப்புக்கு அவர் சாதகமாக நடந்து கொள்வதாக வரும் குற்றச்சாட்டுகளின் பேரிலேயே பணியிடமாற்றம் செய்யப்படுவார் இந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரி.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடியடி நடத்தி இளைஞர்களிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது அப்போதைய கமிஷனர் ஜார்ஜ் தலைமையிலான காவல்துறைதான். போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர் என கூறியதாக வைரல் வீடியோக்கள் இணையங்களில் வலம் வந்தது நினைவிருக்கலாம்.

மூலக்கதை