தஞ்சையில் விவசாயிகள் 3-வது நாளாக தொடர் போராட்டம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தஞ்சையில் விவசாயிகள் 3வது நாளாக தொடர் போராட்டம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்!

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் 3வது நாளாக நடைபெற்று வருகிறது.

காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் முற்றுகைப் போராட்டத்தை செவ்வாய்கிழமை தொடங்கினர்.

இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த.மணிமொழியன், தமிழ்த் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளர் அ.நல்லதுரை, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகி பாரதிசெல்வன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நடுவர் மன்றங்களைக் கலைத்துவிட்டு, ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரணத்தை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். டெல்டாவில் மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

 

 

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகிலேயே தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் கழுத்திலும், இடுப்பிலும் வேப்பிலையை கட்டி கொண்டு வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் படும் துயரை பிரதமருக்கு தெரிவிக்கும் வகையில் வாயில் கூழாங்கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டத்தைப் போல, விவசாயிகளின் காவிரி உரிமைக்கான போராட்டத்திலும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.

 

 

மூலக்கதை