மாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்துமா சினிமா தயாரிப்பாளர் சங்கம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்துமா சினிமா தயாரிப்பாளர் சங்கம்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு என்று தனியாக ஒரு அமைப்பு தேவை என்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் விருப்ப படி 18.07.1979ல் தொடங்கப்பட்டது தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

அன்றைய பிரபல தயாரிப்பாளர்கள் வலம்புரி சோமநாதன், இராம அரங்கண்னல், தேவி பிலிம்ஸ் ராஜகோபால் செட்டியார், ஏவி.எம்.முருகன், கலா கேந்திரா கோவிந்தராசன், சித்ராமஹால் கிருஷ்ணமூர்த்தி, முக்தா சீனிவாசன் ஆகிய ஏழு பேர் சேர்ந்து கையெழுத்திட்டு உருவாக்கிய அமைப்புதான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

இந்த சங்கத்திற்கான சட்ட விதிகளை வகுத்து கொடுத்தவர் முன்னாள் சட்ட அமைச்சர் கா.பட்டாபிராமன்.

18.07.1979 அன்று துவங்கப்பட்ட இந்த சங்கத்திற்கு முக்தா வி.சீனிவாசன் முதல் தலைவராக பதவி வகித்தார். அதன் பிறகு வலம்புரி சோமநாதன், சிதரமாஹல் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, பாரதிராஜா, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், கோவைச்செழியன், கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.முரளிதரன், ஜி.தியாகராஜன், இராம.நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி எஸ்.தாணு என 15 பேர் அமர்ந்த தலைவர் பதவியில் அமர இப்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களுக்குள் போட்டி என்பது மாறி சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழில் முறை நடிகர்கள், இயக்குநர்கள் பிரதான பதவிகளுக்குப் போட்டியிடுவது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கம் உருவாகக் காரணமாக இருந்த எம்.ஜி.ஆர் இந்த பதவிக்கு வர முயற்சிக்கவில்லை. பிரதானமாக தயாரிப்பு தொழிலுக்கு வந்த பின்னரே பிஎஸ் வீரப்பா தலைவர் பதவி வகித்தார். தமிழ் சினிமாவை வளர்தெடுக்க வேண்டும், தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதிக்கவும் அதனால் கலைஞர்களோ, விநியோகஸ்தர்களோ பாதிக்கப்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த ஜாம்பவன்களால் அலங்கரிக்கப்பட்ட பதவியை கைப்பற்ற நடிகர்ளும் - இயக்குநர்களும் போராடுவது ஏன்? அதனை தொழில் முறை தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்ப்பது உள் நோக்கம் உடையதா?

களத்தில் நிற்க்கும் ராதாகிருஷ்ணன், கேயார், நடிகர் விஷால் தலைமையிலான மூன்று அணிகளின் சாதக பாதகம் என்ன?

வருடந்தோறும் தமிழில் வெளிவரும் படங்களில் தயாரிப்பு மூலதன மதிப்பு 600 கோடி. இத்திரைப்பட தயாரிப்பு, வெளியீடு இவற்றின் மூலம் வேலை வாய்ப்பு பெறுகின்ற ஸ்டுடியோக்கள், திரையரங்குகளில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் சொத்துகளின் மதிப்பு சுமார் 5000 கோடி. இத்தொழிலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரம் மிக்க அமைப்பு தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

மாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியை சினிமாவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தாலும் அதனை அமல்படுத்த முன்னாள் தலைவர் இராம நாராயணனுக்குப் பிறகு யாரும் முன்வரவில்லை. சரியான சூழலும் அமையவில்லை. அதனால்தான் சங்கம் தயாரிப்பாளர்கள் நலனுக்காக உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை என்கிறார் தயாரிப்பாளர் ராஜேந்திரன்.

ஏப்ரல் 2 அன்று சென்னையில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்குரிமை உள்ள 1212 தயாரிப்பாளர்கள் அளிக்கும் வாக்குகள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்கள் கட்டுப்பாட்டிலா... உண்மையான தயாரிப்பாளர்கள் கட்டுபாட்டில் தக்க வைக்கப்படுமா? என்பதை தீர்மானிக்க உள்ளது.

அரசியல் கட்சிகள் ரேஞ்சுக்கு வாக்காளர்களைக் கவர கரன்சி, அன்பளிப்புகளை சில நாட்களாக நடிகர்கள் தரப்பு களம் இறக்கி வருவதாக சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

என்னதான் ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?

தொடரும்...

- ராமானுஜம்

மூலக்கதை