வலுக்கிறது விவசாயிகளின் 17 நாள் போராட்டம்… ராகுல் காந்தி நேரில் ஆதரவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வலுக்கிறது விவசாயிகளின் 17 நாள் போராட்டம்… ராகுல் காந்தி நேரில் ஆதரவு

டெல்லி:17 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக திமுக எம்பி திருச்சி சிவா, கனிமொழி, ஓபிஎஸ் அணி எம்பி மைத்ரேயன், தமிழக அமைச்சர் துரைக்கண்ணு, லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை சந்திக்க உள்ளார். அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை