ரயில் மறியலில் ஈடுபட இளைஞர்கள் திட்டம்? ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரயில் மறியலில் ஈடுபட இளைஞர்கள் திட்டம்? ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு!

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடலாம் என கியூ பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 17வது நாளை எட்டியுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதைப் போல் தற்போதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கியூ பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். கியூ பிரிவு போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்று மீண்டும் ஒரு போராட்டம் தொடங்கிவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு தீர்க்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை