லைக்காவிற்கு எதிராக வன்னி எம்பி நிர்மலநாதன் பேச்சாம்… ரூ. 25 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லைக்காவிற்கு எதிராக வன்னி எம்பி நிர்மலநாதன் பேச்சாம்… ரூ. 25 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

கொழும்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சார்லஸ் நிர்மலநாதன் தமிழக தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தங்களது நிறுவனம் குறித்து தவறாக பேசியதாகக் கூறி ரூ25 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு லைக்கா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் நிகழ்ச்சி வவுனியாவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரஜினியின் இலங்கை பயணத்தை எதிர்த்தனர். ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினிகாந்த், தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். இதற்கு லைக்கா நிறுவனம் கடுமையான கண்டனத்தை அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பல தனியாயர் தொலைக்கட்சி நிறுவனங்கள் இதுதொடர்பான விவாதத்தை நடத்தின. அதில் புதியதலைமுறை தொலைக்காட்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி எம்பி சார்லஸ் நிர்மலநாதன் லைக்கா நிறுவனம் குறித்து பேசினார். அதில், ராஜபக்சேவிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத லைக்கா நிறுவனம், சார்லஸ் நிர்மலநாதனை கண்டித்துள்ளது. மேலும், அவர் ரூ25 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தொலைக்காட்சி ஒன்றுக்கு லைக்கா நிறுவனத்தை தவறாகக் கூறினார் என்று கோரி 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை