டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

மெரினாவில் கடலில் இறங்கி கோ‌ஷம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட மாணவர்களும், இளைஞர்களும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக மீண்டும் களம் இறங்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. குறிப்பாக சென்னை மெரினாவில் மீண்டும் ஒரு போராட்டத்தை அவர்கள் நடத்த போகிறார்கள் என்ற தகவல் வெளியானது.

இதையொட்டி சென்னை மெரினாவில் மயிலாப்பூர் துணை போலீஸ் கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் முதல் குவிக்கப்பட்டனர். நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடலில் இறங்கி கோ‌ஷம்

போலீசாரின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்களை பிடித்திருந்தனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டபடி கடலில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கினார்கள். உடனே போலீசார், கடலில் இறங்கிய மாணவர்களை சமாதானப்படுத்தி கரைக்கு அழைத்தனர். ஆனால், அவர்கள் வர மறுத்தனர்.
கைது

இதனால் போலீசாரும் கடலுக்குள் இறங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக கரைக்கு அழைத்து வந்தனர். போலீசாரோடு வர மறுத்து சிலர் தொடர்ந்து கடல் நீருக்குள் நின்றபடி ஆக்ரோ‌ஷமாக கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கடலுக்குள் நின்று போராட்டம் நடத்தியவர்களை மீனவர்கள் உதவியோடு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அவரும் கைது செய்யப்பட்டார்.
டெல்லி செல்வோம்

கைதாவதற்கு முன்பு மணிகண்டன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மாநில அரசும் அலட்சியப்படுத்துகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக எங்களது போராட்டமும் தொடரும், எங்கள் உயிரை விடவும் தயார். நாங்கள் டெல்லி சென்று விவசாயிகளோடு உட்கார்ந்து போராட்டம் நடத்துவோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மீண்டும் போராட்டம்

நேற்று மாலை 4 மணியளவில் மெரினாவில் திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் மீண்டும் ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

மெரினாவில் தொடர்ந்து போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அனுமதி வழங்கப்படும் இடத்தில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்த தடையில்லை. ஆனால், மெரினாவை மீண்டும் ஒரு போராட்ட களமாக்க அனுமதிக்க முடியாது என்று துணை போலீஸ் கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் உறுதிபட கூறினார்.
கோவையில் 26 பேர் கைது

தமிழகம் முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி பாதையில் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் மறியலில் ஈடுபட்ட 17 மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் போராட்டம் நடத்த வந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மூலக்கதை