பிபா உலக கோப்பை கால்பந்து பிரேசில் அணி தகுதி

தினகரன்  தினகரன்

மான்டிவிடியோ: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் விளையாட, முதலாவது அணியாக பிரேசில் தகுதி பெற்றுள்ளது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளை இறுதி செய்வதற்காக, பல்வேறு பிரிவுகளாக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தென் அமெரிக்க பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், பிலிப் கோடின்ஹோ, மார்செலோ ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர். பராகுவே அணி கடுமையாக முயற்சித்தும் ஒரு கோல் கூட போட முடியவில்லை. பிரேசில் அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளைக் குவித்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு தகுதி சுற்று ஆட்டத்தில் பொலிவியா அணியுடன் மோதிய அர்ஜென்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. நடுவரிடம் வாக்குவாதம் செய்து தரக்குறைவாக நடந்து கொண்ட புகாரில் அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து அர்ஜென்டினா தரப்பில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிகிறது. எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் மெஸ்ஸி விளையாட அனுமதி கிடைக்காவிட்டால், 5 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி பிரதான சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகிவிடும். தென் அமெரிக்க பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பையில் விளையாட தகுதி பெறலாம். 5வது இடம் பிடிக்கும் அணி பிளே ஆப் போட்டியில் விளையாட நேரிடும்.

மூலக்கதை