தியோதர் கோப்பை கிரிக்கெட் தமிழகம் சாம்பியன்

தினகரன்  தினகரன்

விசாகப்பட்டிணம்: தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலில், இந்தியா பி அணியை 42 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விஜய் ஹசாரே டிராபியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதிய தியோதர் டிராபி தொடர் (50 ஓவர்) விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வந்தது. லீக் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா பி, தமிழகம் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரண்டு லீக் ஆட்டத்திலும் தோற்ற இந்தியா ஏ அணி வெளியேற்றபட்டது.ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பைனலில் டாசில் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்தது. கவுஷிக் காந்தி 16, கங்கா தர் 13, முருகன் அஷ்வின் (0) அடுத்தடுத்து வெளியேறியதால், 10.3 ஓவரில் 39 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தமிழகம் தடுமாறியது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் - ஜெகதீசன் ஜோடி பொறுப்புடன் விளையாடி 4வது விக்கெட்டுக்கு 136 ரன் சேர்த்தது. ஜெகதீசன் 55 ரன், கேப்டன் விஜய் ஷங்கர் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 126 ரன் விளாசி (91 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.  தமிழக அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. இந்திரஜித் 31, சாய் கிஷோர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா பி பந்துவீச்சில் தவால் குல்கர்னி 10 ஓவரில் 1 மெய்டன் உள்பட 39 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். டிண்டா, மிலிந்த், அக்சர் பட்டேல், ஹர்பிரீத் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா பி அணி 46.1 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குர்கீரத் சிங் அதிகபட்சமாக 64 ரன் எடுத்தார். கேப்டன் பார்திவ் பட்டேல் 15, ஷிகர் தவான் 45, மணிஷ் பாண்டே 32, ஹர்பிரீத் சிங் 36, கர்னேவார் 29, அஷோக் டிண்டா 19 ரன் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தமிழக பந்துவீச்சில் ரகில் ஷா 3, முகமது, சாய் கிஷோர் தலா 2, விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 42 ரன் வித்தியாசத்தில் வென்ற தமிழகம் தியோதர் கோப்பையை முத்தமிட்டது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை