பேருக்கு இருக்கு சுத்திகரிப்பு நிலையம் நொய்யலுக்கு விஷம்: மாநகராட்சி விஷமம்! ஊருக்கு ஓரமா ஆற்றில் கலக்குது கழிவுநீர்!

தினமலர்  தினமலர்
பேருக்கு இருக்கு சுத்திகரிப்பு நிலையம் நொய்யலுக்கு விஷம்: மாநகராட்சி விஷமம்! ஊருக்கு ஓரமா ஆற்றில் கலக்குது கழிவுநீர்!

'நம்மூரு நொய்யல் இப்படி பாழாப் போகுதேன்னு, ராத்திரியெல்லாம் துாக்கமே பிடிக்கலீங்க' என்று சிரிக்காமல் 'தமாஷ்' பேசும் சூழல் ஆர்வலர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை; புட்டுவிக்கி பாலத்தின் அடியில், நொய்யல் ஆற்றில், குழாய் மூலமாக கழிவுநீரைக் கலந்து, நதியை நாசப்படுத்தி வருகிறது, கோவை மாநகராட்சி.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டக்காமுத்துார் செல்லும் வழியில் உள்ளது புட்டுவிக்கி பாலம். இந்த பாலத்தின் அடியில், நொய்யல் ஆறு ஓடுகிறது. ஊரெல்லாம் எல்லா நீர்நிலையும் வற்றி வறண்டு கிடக்கும் நிலையில், அங்கே மட்டும் தண்ணீர் நுரைத்துப் பொங்கி பெருக்கெடுத்து ஓடுகிறது என்றால், அதற்குள் தான் விஷயமே இருக்கிறது. கோவை நகரின் வீடுகள், ஓட்டல்கள், கழிப்பறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்தான், இப்படி நொய்யலை நாறடித்து பாய்கிறது.
கலப்பதே கார்ப்பரேஷன் தான்!அதைப் பார்க்காமல் செல்வோரையும் பார்க்க வைக்கும் அளவுக்கு மிரட்டுகிறது துர்நாற்றம்; நொய்யல் நதியில் கலப்பது, கழிவு நீர்தான் என்பது, இந்த வழியாக பயணிக்கும் ஒவ்வொருவரும் அறிந்த விஷயம். ஆனால், அந்த கழிவுநீரை குழாய் வழியாக பாய்ச்சுவதே, மாநகராட்சி தான் என்பது, பலரும் அறியாத ரகசியம்; யாருக்குமே தெரியாமல், செட்டிவீதி வழியாக பாதாள சாக்கடையில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பே செய்யாமல் நொய்யலில் கலப்பது தான், மாநகராட்சி செய்யும் விஷமம்.பாதாளச் சாக்கடை நீரை சுத்திகரிக்க, ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரைப்பு திட்டத்தின் கீழ், உக்கடத்தில் பல கோடி ரூபாய் செலவில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய்கள் வழியாக, இங்கு செல்லும் கழிவுநீர், நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் சுத்திகரிக்கப்படுகிறது. இதன் பின், செட்டிபாளையம் 'கோல்ப் கிளப்'புக்கு அந்த தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால், சுண்டக்காமுத்துார் நொய்யல் ஆற்றுக்கு, குழாய் வழியாக கழிவு நீர் திருப்பி விடப்பட்டதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இவ்வழியில் பாதாள சாக்கடை அமைக்க, ஒதுக்கப்பட்ட நிதி, எங்கே போனதென்று சந்தேகம் கிளம்புகிறது. குடியிருப்புப் பகுதிகளில், பழைய டயர், தேங்காய் மூடிகளை கவிழ்த்துப் போடச் சொல்லும் மாநகராட்சி, அதைச் செய்யாவிட்டால் அபராதமும் விதிக்கிறது.
யார் அபராதம் விதிப்பது?அதே மாநகராட்சி நிர்வாகம், நகரின் ஒரேயொரு நீர் ஆதாரமான நொய்யலில் கழிவுநீரைக் கலப்பது எந்த வகை நியாயமென்று தெரியவில்லை. சுகாதார விதிகளை மீறும் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்பது யார் என்பதற்கு யாராவது பதில் சொன்னால் நல்லது. கோவை நகரிலுள்ள எட்டு குளங்கள் தான், மாநகராட்சி வசமுள்ளன; ஆற்றுப்படுகை, ஓடைகள் அனைத்தும், பொதுப்பணித்துறை வசமே உள்ளன. அந்த வகையில், இதைத் தடுக்க வேண்டியதும், அத்துறை தான்.அதேபோன்று, நீர் ஆதாரத்தில் விஷத்தைக் கலக்கும் மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உள்ளது. ஆனால், இவை எதையுமே கண்டு கொள்ளாமல், இதே நகரில் வாகனங்களில் வலம் வருகின்றனர், இத்துறை அதிகாரிகள். அரசு குடியிருப்பு, ஓட்டுனருடன் வாகன வசதி, கை நிறைய ஊதியம் வாங்கும் இவர்களுக்கு, நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டுமென்று உணர்வில்லையா என விவசாயிகள் கேட்கின்றனர்.அரசு துறைகளின் லட்சணம் இப்படியிருக்க, நொய்யல் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைக் காப்பதற்கு பாடுபடும் சூழல் அமைப்புகளும் இதைத் தடுக்க முயற்சி எடுக்காதது, ஆச்சரியத்தை அளிப்பதாகவுள்ளது. குளங்களை துார் வாருவதும், சீமைக் கருவேலங்களை அகற்றுவதும், கரை மற்றும் வேலி அமைப்பதும், அவசியமான, ஆதரிக்கத்தக்க நடவடிக்கைகள் தான். அப்படியே, ஆற்றிலும், குளங்களிலும் கலக்கும் கழிவுநீரையும் தடுக்க உரக்கக் குரல் எழுப்ப வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
துாங்கும் மாவட்ட நிர்வாகம்!மாநகராட்சி கல்விக்குழு முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம் (இ.கம்யூ.,) கூறுகையில், ''மாநகராட்சியே ஆற்றில் கழிவுநீரை கலந்தால், விதிகளை மீறும் தனியார் நிறுவனங்களை யார் தடுக்க முடியும்? மழை காலங்களில், இவ்வழியே செல்லும் நொய்யல் நீரைதான், வழியோர கிராம மக்கள் பயன் படுத்துகின்றனர்; கால்நடைகளும் குடிக்கின்றன. இது நன்கு தெரிந்தும், யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்றிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். சூழல் அமைப்புகள், என்ன செய்கின்றன?'' என்றார்.அரசியல் சார்பற்ற விவசாய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''நொய்யல் ஆற்றில் மாநகராட்சி கழிவு நீர் கலப்பது குறித்து, பலமுறை புகார் செய்தும், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. புட்டுவிக்கி பாலம் அருகில், நதி நீரில் டி.டி.எஸ்.,அளவு, 7,000 ஆக உள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க உயர்நீதிமன்றம் அமைத்த, சிவராமன் கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து நிர்வாகம் விளக்க வேண்டும்,'' என்றார்.இது குறித்து, மாநகராட்சிப் பொறியாளர் (பொறுப்பு) பார்வதியிடம் கேட்டபோது, ''கள ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


-நமது நிருபர்-

மூலக்கதை