10 ரூபாய் நாணய விவகாரம் ரிசர்வ் வங்கி அதிகாரி எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
10 ரூபாய் நாணய விவகாரம் ரிசர்வ் வங்கி அதிகாரி எச்சரிக்கை

கோவை : ''தமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் எச்சரித்தார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில், தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில், 'டிஜிட்டல், ஆன்லைன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை' தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில், சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் பேசியதாவது:ஏப்., 1ல் இருந்து பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மக்களிடையே, 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது. இது, தவறானது. இதை யாரும் நம்பக் கூடாது.

புகார் கொடுத்தால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பஸ்களில், 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் நாணயத்தை பெற்றுக் கொள்ளும்படி, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தலாம்; இதனால், நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை