சிறிலங்கா இராணுவத்திற்குள் மோசமானவர்கள் உள்ளனர்! உண்மையை வெளிப்படுத்தும் மங்கள!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்கா இராணுவத்திற்குள் மோசமானவர்கள் உள்ளனர்! உண்மையை வெளிப்படுத்தும் மங்கள!

 சிறிலங்கா இராணுவத்தில் கறுப்பு ஆடுகளும் இருக்கின்றன என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

 
சிறிலங்காவுக்கு எதிராக மிகமோசமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது எமக்குத் தெரியும். முதலில் இந்தக் குற்றச்சாட்டுகள், போர்க்குற்றங்களா இல்லையா என்று பார்த்து விட்டே, முடிவு செய்யப்படும்.
 
தனிப்பட்ட முறையில் உலகில் மிகவும் ஒழுக்கமான இராணுவத்தை சிறிலங்கா கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். ஆனால், ஏனைய இராணுவங்களைப் போலவே, இங்கும் தவறானவர்கள் இருக்கிறார்கள். கறுப்பு ஆடுகள் இருக்கின்றன.
 
எனவே, தவறு செய்தவர்கள் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டால், இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். 
 
பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நியாயமான, சுதந்திரமான, நம்பகமான நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதே, சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான கரிசனையாக உள்ளது.
 
எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய வெளிப்படையான ஒரு பொறிமுறையை நாங்கள் உருவாக்குவோம். அனைத்துலக சமூகத்துக்கும் அது தெரியும்.
 
ஜெனிவா தீர்மானம் ஒன்றும் கல்லில் செதுக்கப்பட்டது அல்ல. குறிப்பிட்ட சில பரிந்துரைகளை அவசியமானவை என்று தாம் நினைக்கின்ற போதிலும், இறுதி முடிவை சிறிலங்காவே எடுக்கும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்கா வந்த போது கூறியிருந்தார். இறைமையுள்ள அரசாங்கம் என்ற வகையில், ஜெனிவா தீர்மானம் தொடர்பாக சிறிலங்காவே இறுதி முடிவை எடுக்கும்.
 
ஐ.நாவில் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு காலஅவகாசத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றிய ஒரு பாதை வரைவு எல்லா பங்காளர்களுடனும் அமர்ந்து பேசி முடிவு செய்யப்படும்.
 
புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதியும், பிரதமரும் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றனர். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்துவது பாரிய சிக்கலை ஏற்படுத்தும்.
 
ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பான சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும் 2014ஆம் ஆண்டு தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது, சிறிலங்காவுக்கு 12 நாடுகள் மாத்திரமே ஆதரவு அளித்தன.
 
ஆனால் இம்முறை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எதிர்க்கேள்விகள் எழுப்பப்படவில்லை. குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வரவேற்பும் ஆதரவும் மாத்திரமே தெரிவிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் அதில் அடங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூலக்கதை