4 ஆட்டங்களில் விளையாட தடை: மெஸ்ஸி இல்லாத போட்டியில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி - மேல்முறையீடு செய்ய முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
4 ஆட்டங்களில் விளையாட தடை: மெஸ்ஸி இல்லாத போட்டியில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி  மேல்முறையீடு செய்ய முடிவு

ஜுரிச்: 2018ம் ஆண்டுக்கான பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த உலக கோப்பை தகுதி சுற்று போட்டி ஒன்றில், சிலி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. ஆனால் இந்த போட்டியின்போது, பிரேசிலை சேர்ந்த துணை நடுவரான எமர்சன் அகஸ்டோ கார்வல்ஹோவை அவமதிக்கும் வகையில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பேசினார்.

அந்த நேரத்தில் மெஸ்ஸி என்ன கூறினார்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என எமர்சன் அகஸ்டோ கார்வல்ஹோ தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்திய பிபா, மெஸ்ஸி 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து, அதிரடியாக உத்தரவிட்டது.

இதனிடையே லா பாஸ் நகரில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த பொலிவியா அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டி தொடங்குவதற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பாக பிபா உத்தரவு வெளியானதால், மெஸ்ஸி இந்த போட்டியில் விளையாடவில்லை. இன்னும் உருகுவே, வெனிசுலா, பெரு அணிகளுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளிலும் மெஸ்ஸி விளையாட முடியாது.

சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அடுத்ததாக அவர், அர்ஜென்டினா அணியின் கடைசி தகுதி சுற்று போட்டியான, ஈக்வாடர் அணிக்கு எதிரான போட்டியில்தான் விளையாடுவார். இந்த போட்டி வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெறவுள்ளது.

5 முறை உலகின் சிறந்த வீரர் விருது வென்ற மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தடையால், 2 முறை உலக கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (ஏஎப்ஏ) முடிவு செய்துள்ளது.


.

மூலக்கதை