ஆர்கே.நகர் தொகுதி பிரசாரத்தில் எதிரொலிக்கும் கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்னை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்கே.நகர் தொகுதி பிரசாரத்தில் எதிரொலிக்கும் கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்னை

சென்னை- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருந்த ஆர். கே. நகர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றாலும் அங்கு வாழும் மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்றியே தீருவோம் என்று தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றாலும் அந்த பக்கமே எந்த அரசியல்வாதியும் செல்வதில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜெயலலிதாபோட்டியிட்ட போதும் ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இதில் எதையெல்லாம் நிறைவேற்றினார்கள் என்று ஆட்சியாளர்கள் சொல்லட்டும் பார்க்கலாம் என்று கேட்கின்றனர் தொகுதி மக்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் சென்னையின் முக்கிய பகுதியில் ஸ்டார் அந்தஸ்தை பிடித்த ஆர். கே. நகர் தொகுதி இன்று அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

அப்படி என்னதான் இந்த தொகுதி மக்களின் முக்கிய பிரச்னை என்று பார்த்தால் யாரிடம் கேட்டாலும் முதல் பிரச்னையாக கொடுங்கையூர் குப்பை மேட்டை தான் சுட்டிக்காட்டுகின்றனர். மலைபோல் குவிந்திருக்கும் விஷக்கிருமிகள் கொண்ட மருத்துவ கழிவுகளுடன் குப்பைகளை அடிக்கடி எரிப்பதால் அப்பகுதி மக்கள் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகுவதாக வேதனைப்படுகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண்பது யார் என்பது தான் இப்பகுதி மக்களின் ஏகோபித்த கேள்வியாக உள்ளது.

மேலும் பல குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

வேலை வாய்ப்பு பெருகும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

தற்போது திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இந்த கோரிக்கைகளை உறுதியாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்.

இதுபோன்று சுயேட்சைகள் உள்பட பல்வேறு வேட்பாளர்களும் இப்பிரச்னைகளை குறி வைத்து பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதால் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

.

மூலக்கதை