வேலூர் சிறையில் முருகனிடம் செல்போன் சிக்கியது எதிரொலி... நளினியை சந்திக்க தடை விதித்த சிறைத்துறை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேலூர் சிறையில் முருகனிடம் செல்போன் சிக்கியது எதிரொலி... நளினியை சந்திக்க தடை விதித்த சிறைத்துறை

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் முருகனிடம் செல்போன் சிக்கியதால், நளினியை சந்திக்க முருகனுக்கு சிறைத்துறை டிஐஜி முகமது ஹனீஃபா தடை விதித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வெடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் சிறையில் உள்ளார்.

பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நளினியை முருகன் சந்தித்து வந்தார்.

கடந்த 25-ஆம் தேதி முருகனின் அறையை காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுவாமி படங்களுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முருகன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையாக பெண்கள் சிறையில் நளினியை சந்தித்து பேச அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை சிறைத்துறை டி.ஐ.ஜி. முகமது ஹனீஃபா பிறப்பித்துள்ளார். மேலும் முருகனை அவரது வழக்கறிஞர் புகழேந்தி தவிர வேறு யாரும் சந்திக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூலக்கதை