ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு: காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு: காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

ஊத்துக்கோட்டை- ஊத்துக்கோட்டை அருகே மாம்பாக்கத்தில், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு 2 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து விட்டது. அதனால், ஒரே ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்துதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அதுவும், கடந்த 3 மாதங்களாக 10 நிமிடங்கள் மட்டுமே விடப்படுகிறது. இதனால் மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை.

கடந்த 20 நாட்களாக மாம்பாக்கம் மெயின் ரோடு பகுதிக்கு குடிநீர் வருவதே கிடையாது. இதனால் பெண்கள் காலி குடங்களுடன் ஒரு கிமீ தொலைவில் உள்ள வயல் வெளிகளுக்கு சென்று மின்மோட்டார்களில் தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.



இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இன்று காலை 7 மணியளவில் காலி குடங்களுடன் போந்தவாக்கம்-வேளகாபுரம் கிராம சாலையில் மாம்பாக்கம் நூலக கட்டிடம் அருகில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்தனர்.

தகவலறிந்து பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

.

மூலக்கதை