ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மீனம்பாக்கம்- ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. அதே நேரத்தில் மாநில அரசும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறது என்று மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆர். கே. நகர் இடைத்தேர்தல் அறிவித்து தேர்தல் பணி தொடங்கியதும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், ஏற்கனவே நடந்த தேர்தலின்போதும் இருந்தார். அவர் இருந்தால் தேர்தல் நேர்மையாக நடக்காது என்று கருதி, அவரையும், தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தவரையும் மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தகுந்த ஆதாரங்களுடன் முறையிட்டோம்.

அதை ஏற்று கொண்டு தேர்தல் ஆணையம், இருவரையும் இடமாற்றம் செய்துள்ளது.

தற்போது, ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் சில அதிகாரிகள் சேர்ந்து கொண்டு, தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, சட்ட விதிகளுக்கு முரணாக சில செயல்களில் ஈடுபடுகின்றனர். இதையும் தகுந்த ஆதாரங்களுடன் நேற்று சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆர். கே. நகர் இடைத்தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் டிடிவி. தினகரன் பெயர் 2வது இடத்தில் இருந்தாலும் சரி, முதல் இடத்தில் இருந்தாலும் சரி, வாக்கு எண்ணிக்கையில் அவர், கடைசி இடத்துக்கு வர போகிறார். விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசுக்கு திரும்ப திரும்ப கூறி பார்த்தார்கள்.

செவிகொடுத்துகூட கேட்கவில்லை. இனிமேலும் தமிழக அரசை நம்பி கொண்டிருக்க முடியாது என்று கருதிய விவசாயிகள், டெல்லிக்கு சென்று தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இங்குள்ள மாநில அரசுக்கு அதுபற்றி எந்த கவலையும் இல்லை.

இதுவரையில் வேளாண்துறை அமைச்சரோ, முதல்வரோ டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து பேசகூட இல்லை. இவர்களுக்கு விவசாயிகள் நலன் பற்றியோ, தமிழக மக்களின் நலன் பற்றியோ எந்த கவலையும் இல்லை.

இவர்களுடைய ஒரே கவலை எல்லாம் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதுதான். அதுதான் இவர்களது முழு கவலையும்.

ஆனால் திமுக எம்பிக்கள், டெல்லியில் விவசாயிகளை தினமும் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி ஆதரவு தெரிவிக்கின்றனர். அதோடு, நேற்று திமுக எம்பி.

திருச்சி சிவா, விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் அழைத்து சென்று நேரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் இங்கிருக்கும் மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி, விவசாயிகள் பிரச்னையில் எந்தவித அக்கறையும் காட்டாமல் மவுனமாக இருக்கின்றனர்.

தமிழக சட்டசபையின் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நான் பேசும்போது, ஹைட்ரோ கார்பன் பற்றி மிக தெளிவாக எடுத்து கூறினேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எப்படி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினோமோ, அதேபோல் இந்த பிரச்னைக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பதிலளித்த முதல்வர் மற்றும் அந்த துறை சம்பந்தப்பட்ட அமைச்சர், ‘தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு ஒருபோதும் அனுமதி கொடுக்க மாட்டோம்.

மத்திய அரசு, இந்த திட்டத்தை கொண்டு வந்தால், அதை மாநில அரசு ஏற்று கொள்ளாது’ என்று உறுதியாக கூறினார்கள். அதேபோல் மத்தியில் அமைச்சர்களாக இருப்பவர்களும், தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஒரு போதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று திரும்ப திரும்ப உறுதிபட கூறினார்கள்.

ஆனால் இருதினங்களுக்கு முன்பாக டெல்லியில், மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு, தமிழகம் உள்பட பல இடங்களில் எடுப்பதற்கு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டும் அதற்கான கையெழுத்தும் ஆகிவிட்டது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக மக்களை ஏமாற்றி கொண்டு இரட்டை வேடம் போடுகிறது.

அதற்கு இங்குள்ள மாநில அரசு மவுனமாக இருந்து துணைபோகிறது.

.

மூலக்கதை