பஷீரிடம் 3 மணிநேரம் விசாரணை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பஷீரிடம் 3 மணிநேரம் விசாரணை

ரீ.எல்.ஜவ்பர்கான்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் தடுத்துவைத்து விசாரணைசெய்துள்ளனர். 

இதற்கு முன் இரண்டு தடவைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருந்தும் அவர் சமுகமளிக்காது இருந்தபோதிலும்  குற்றத்  தடுப்புப் பிரிவின் கடுமையான  எச்சரிக்கையின் பின்னர்  பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவில்  நேற்று (28) ஆஜரானார். 

இந்நிலையில்,  மூன்று  மணித்தியாலமாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு, பஷீர்சேகுதாவூத்திடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 

“தாருஸ்ஸலாம்  மறைக்கப்பட்ட உண்மைகள்“  எனும்  முகவரியற்ற புத்தகமொன்றை  தனிநபர்களுக்கு சேறு  பூசும் வித்த்தில்  வெளியிட்டமை தொடர்பிலேயே,  பஷீர் சேகுதாவூத்திடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, 

இதன் போது  இது  தொடர்பில்  குற்றப்புலனாய்வுப்  பிரிவினரால்  முன்வைக்கப்பட்ட  ஆதாரங்கள் தொடர்பில் பஷீர்சேகுதாவூத் எதுவிதப் பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அகில  இலங்கை  மக்கள் காங்கிரசின்  சட்டத்தரணிகளில்  ஒருவரான  சிராஸ்  நூர்தீன்,  பஷீர் சேகுதாவூத்துடன் விசாரணைகளில்  பங்கேற்றார்.

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும்  நூலுக்கு எதிராக  ஶ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  பிரதித்தலைவரும்  முதலமைச்சருமான  ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்,எச்,எம்  சல்மான் ஆகியோர் கொழும்பு  குற்றப்புலனாய்வுப் பிரிவில்  முறைப்படொன்றை  பதிவு செய்தனர் . 

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே, பஷீர் சேகுதாவூத்திடம்  விசாரணைகள்  முன்னெடுக்கப்ப்பட்டுள்ளன. 

இந்நிலையில்,  மற்றுமொரு  விசாரணைக்கும்  பஷீர்சேகுதாவூத்துக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை