மெஸ்ஸி முக்கியமான போட்டிகளில் விளையாடத் தடை!

PARIS TAMIL  PARIS TAMIL
மெஸ்ஸி முக்கியமான போட்டிகளில் விளையாடத் தடை!

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண் போட்டிகளில் விளையாட ஆர்ஜன்டீன நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிலிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது உதவி நடுவரை இழிவுபடுத்தும் விதமாக மெஸ்ஸி பேசியதை அடுத்தே பத்தாயிரம் டொலர் அபராதத்துடன் இத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 
எனினும், தடை குறித்து மேன்முறையீடு செய்ய ஆர்ஜன்டீன உதைபந்தாட்ட அணியின் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
 
உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் ஒன்று கடந்த வியாழக்கிழமை சிலியில் நடைபெற்றது. இதில், ஆர்ஜன்டீனா மற்றும் சிலி ஆகிய இரு அணிகளும் பங்கேற்றன.
 
முதல் பாதி ஆட்டத்தின்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொண்ட லயனல் மெஸ்ஸி அதை கோலாக்கினார். இதன் பின்னர் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புகள் சாத்தியமாகவில்லை.
 
போட்டி நிறைவுபெறச் சில நிமிடங்களே இருந்த நிலையில், மெஸ்ஸி தவறான ஆட்டத்தில் ஈடுபட்டதாக உதவி நடுவர் சமிக்ஞை செய்தார். இதைக் கண்ட மெஸ்ஸி பொறுமை இழந்து, நடுவரை நோக்கிக் கையை நீட்டியதுடன் அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.
 
ஆட்ட முடிவின் பின்னர் இது குறித்து நடைபெற்ற விசாரணையையடுத்து, அடுத்த நான்கு போட்டிகளில் மெஸ்ஸி விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
 
இதையடுத்து, இன்று நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவிடம் வீழ்ந்தது ஆர்ஜன்டீனா. அடுத்து உருகுவே, பாராகுவே மற்றும் வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளிலும் மெஸ்ஸி விளையாட மாட்டார் என்பதால், ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
 
இப்போட்டிகளில் மெஸ்ஸி விளையாட முடியாமல் போனது குறித்து ஆர்ஜன்டீன அணியினரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை