தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 7 மாநில விவசாயிகள் டெல்லியில் குவிகின்றனர்: ‘கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடரும்’ என திட்டவட்ட அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 7 மாநில விவசாயிகள் டெல்லியில் குவிகின்றனர்: ‘கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடரும்’ என திட்டவட்ட அறிவிப்பு

திருச்சி- ‘விவசாயிகள் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும்’ என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள தமிழக விவசாயிகள், டெல்லியில் இன்று 16வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக 7 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் குவிந்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.

தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதி முழுமையாக ஒதுக்க வேண்டும். விவசாயிகளின் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கடும் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட 350 விவசாய குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 90 பேர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 14ம் தேதி போராட்டத்தை துவங்கினர்.

தமிழக விவசாயிகளுக்கு டெல்லியில் உள்ள தமிழர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஜந்தர்மந்தர் பகுதிக்குத் தினமும் வந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்று வருகின்றனர். இதுதவிர டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள், நடிகர்கள் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அனைத்து விவசாயிகள் சங்கம், கல்லுாரி மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடத் தப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்பி மணிசங்கர் அய்யர், ஆம்ஆத்மி கட்சி தலைவர் சோம்நாத் பாரதி, கேரளா விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார், மைத்ரேயன் எம்பி ஆகியோர் நேற்று மாலை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து த. மா. கா தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் விவசாய பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் ஆகியோர் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, செயலாளர் பழனியாண்டி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மணி ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை இரவு 7. 15க்கு சந்தித்தனர்.

சுமார் 15 நிமிடம் சந்தித்த அவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி, கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

அய்யாக்கண்ணு கூறுகையில், கடந்த 15நாள் போராட்டத்திற்கு பின் ஜனாதிபதியை சந்தித்தோம். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, மனுவை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்புவதாக கூறினார்.

விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிதியமைச்சரிடம் முன் வைத்துள்ளோம். ஆவன செய்வதாக  கூறியுள்ளார்.

ஜனாதிபதி, நிதியமைச்சர் ஆகி யோரிடம் அளித்துள்ள மனுவின் மீது பிரதமர் உடனடியாக தலையிட்டு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்தால் மட்டுமே இந்த போராட்டத்தை கைவிட்டு டெல்லியில் இருந்து வெளி யேறுவோம்.

இல்லா விட்டால் டெல்லியை ஸ்தம்பிக்கும் வகையில் விவசாயிகளின் போராட்டம் பெரிய அளவில் இருக்ககூடும் என்றார். இந்நிலையில் இன்று காலை 16வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகிய 7 மாநிலங்களில் உள்ள விவசாயிகள்  குவிந்த வண்ணமாக உள்ளனர்.

அய்யாக்கண்ணு தலைமையில் 100 பேர் கோவணம் அணிந்து  போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை