ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம்: நெடுவாசல் போராட்டக்குழு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம்: நெடுவாசல் போராட்டக்குழு அறிவிப்பு

புதுக்கோட்டை- ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தஞ்சை, புதுக்கோட்டை விவசாயிகளுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் மாபெரும் அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டக்குழுவினர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நேற்று கலெக்டர் கணேசிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசலில்  ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க போவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த எரிவாயு எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு எங்களின் விளை நிலங்கள் பாதிப்படைந்த வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெடுவாசலில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நெடுவாசலில் போராட்டம் நடத்தினோம்.

அப்போது சென்னையில் மாநில முதல்வர் சந்திப்பு, மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பு, பின்னர் கலெக்டர் பேச்சுவார்த்தை இவர்கள் அளித்த உத்தரவாதத்தினால் நாங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றோம்.

நேற்று முன்தினம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் வைத்த கோரிக்கையின் படி மத்திய எண்ணை நிறுவனம் போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
நெடுவாசல் போராட்டக்குழுவினர் சார்பில் தட்சிணாமூர்த்தி அளித்த பேட்டி: நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இன்னும் 6 மாதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்துவோம் என்று ஜெம் லேபாரட்டரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்னும் ஒரு வாரத்தில் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் ஆலோசித்து பெரிய அளவிலான போராட்டம் நடத்த உள்ளோம். இதேபோல் நெடுவாசலை சுற்றி உள்ள 70க்கும் மேற்பட்ட கிராம முக்கியஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

நாளை சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டி அதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்து உள்ளோம்.

மேலும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்றார்.

.

மூலக்கதை