டிடிவி தினகரன் தாராளம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிடிவி தினகரன் தாராளம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை- ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் தாராளமாக வழங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர். கே. நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக (அம்மா) சார்பில் டிடிவி தினகரன், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கங்கை அமரன், எம். ஜி. ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ. தீபா உள்பட மொத்தம் 62 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து நேற்று மாலை தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது.

இதில் திமுக செயல்தலைவர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இது போன்று தேர்தல் பிரச்சாரம் களை கட்டி வரும் நிலையில், அதிமுக (அம்மா ) வேட்பாளர் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், குடம் என தாராளமாக வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பணியில் வெளியூரிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு மும்மரமாக நடந்து வருகிறது. டிடிவி தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் எதிர்ப்பு பலமாக இருப்பதால், இது போன்று வெளியூர் ஆட்களை வைத்து எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் என்று திமுக உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.   எனவே தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


.

மூலக்கதை