குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை : RSS தலைவர் மோகன் பகவத் மறுப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதாக வெளியான செய்தி பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார். RSS இயக்கத் தலைவர் மோகன் பகவத்தை குடியரசுத் தலைவராக்குவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா கூறியிருந்தது. குடியரசுத் தலைவர் பதவிக்கு மோகன் பகவத்தே சரியான தேர்வு என்பது சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் கருத்து. ஆனால் மோகன் பகவத்தை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற சிவசேனாவன் கருத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என காங்கிரஸ் கூறியது. விரைவில் தங்களது தரப்பு குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கெளரவ் கோகாய், மதசார்பற்ற நாட்டில் RSS கொள்கைகளை ஏற்க முடியாது என்றார். மேலும் தங்களது தரப்பு குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்றார். விரிவான ஆலோசனைக்கு பின் தான் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி பிரணாப்பின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையடுத்து அப்பதவிக்கான வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் விவாதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிவசேனாவின் கருத்துக்கு மாறாக, தாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என மோகன் பகவத் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை