அட்டு படத்திற்காக 6 மாதமாக ரியல் கேங்ஸ்டர்களுடன் பழகினேன்! -நடிகர் ரிஷி ரித்விக்

தினமலர்  தினமலர்
அட்டு படத்திற்காக 6 மாதமாக ரியல் கேங்ஸ்டர்களுடன் பழகினேன்! நடிகர் ரிஷி ரித்விக்

ட்ரீம் ஐகான் பிலிம் சார்பில் எஸ்.அன்பழகன் தயாரித்துள்ள படம் அட்டு. ரத்தன் லிங்கா இயக்கியுள்ள இந்த படத்தில் ரிஷி ரித்விக், அச்சனா ரவி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற வெள்ளியன்று திரைக்கு வரும் இப்படத்தை ஸ்டுடியோ-9 ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். வட சென்னை ரவுடிசம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இந்த அட்டு படத்திற்காக சிலம்பம், கத்திச்சண்டை என பல கலைகளை முறைப்படி கற்று நடித்துள்ள ரிஷி ரித்விக், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு 6 மாதமாக ரியல் கேங்ஸ்டர்களுடன் தான் சுற்றிக்கொண்டு திரிந்ததாக சொல்கிறார்.

அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அட்டு படம் வடசென்னை கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது. ரவுடிசம் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, 6 மாதமாக வடசென்னையிலுள்ள ரியல் கேங்ஸ்டர்களுடன் பழகினேன். அவர்களோட பாடிலாங்குவேஜ், ஆக்டிவிட்டிஸ்களை உள்வாங்கினேன். பின்னர், பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், முகபாவணைகளை கற்றேன். கத்தி, குங்பூ போன்ற கலைகளை கற்றுக்கொண் டேன். முக்கியமாக, இந்த படத்திற்காக டம்மி இல்லாத ஒரிஜினல் கத்தியை வைத்து சண்டை போட்டேன். முதலில் சிலம்பம் கற்றுக்கொண்டு, பின்னர் ஸ்டெடி குச்சி பயிற்சிக்குப்பிறகு கத்தி பயிற்சி 4 மாதம் எடுத்தேன். இப்படித்தான் அட்டு என்கிற கதாபாத்திரத்திற்காக என்னை முழுமையாக தயார்படுத்தினேன்.

அப்படி நான் முறையாக பயிற்சி எடுத்திருந்த காரணத்தினால்தான், இந்த படத்தின் ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் ஒன்றரை நாளில் எடுத்து விட்டனர். கத்திச்சண்டையில் கவனமாக நடித்தேன். 65 நாள் படப்பிடிப்பு நடந்தது. குப்பைமேட்டில் மட்டும் 25 நாட்கள் நடித்தேன். இதுதான் எனது முதல் படம். நடிப்பு பயிற்சி எதுவுமே செய்யவில்லை. டைரக்டர் சொன்னதை அப்படியே மைண்டில் ஏற்றி நடித்தேன். மேலும், அட்டு படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் சிக்ஸ்பேக் வைத்திருந்தேன். ஆனால் ரவுடி கேரக்டர் என்பதால் வெயிட் போட்டு நடித்தேன். எனக்கு விக்ரம்தான் ரோல் மாடல். அவர் மாதிரிஎந்த மாதிரியான வேடம் என்றாலும் முழுமையாக என்னை மாற்றிக்கொண்டு நடிக்க தயாராக இருக்கிறேன்.

இந்த அட்டு படத்தை பார்த்த அம்மா கிரியேசன்ஸ் சிவா, ஸ்டுடியோ-9 சுரேஷ், நடிகர் சாந்தனு ஆகியோர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டனர். அடுத்த வருடம் புதுமுக நாயகன் விருதுகளை நீங்கள்தான் வாங்குவீர்கள் என்று சொன்னார்கள். அவர்களின் வார்த்தை எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

அட்டு படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. இதையடுத்து ஸ்டுடியோ -9 ஆர்.கே.சுரேஷ் சாருடன் உக்ரம் என்ற படத்தில் நடிக்கிறேன். அவர் இந்த படத்தில் நெகடீவ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், அட்டு படத்தை பார்த்த, சுந்தர்.சி, ஹரி, சுசீந்திரன், முத்தையா போன்ற டைரக்டர்களின் கோ- டைரக்டர்கள் அடுத்து என்னை வைத்து படம் இயக்க கதை சொல்லியுள்ளனர். ஆக, நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல கதைகளில் நடிக்க ரெடியாகி விட்டேன். இந்த நிலையில், எனது நடிப்புக்கு ரசிகர்கள் எந்தமாதிரியான ரெஸ்பான்ஸை கொடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய, பரீட்சை எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனின் மனநிலையில் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ரிஷி ரித்விக்.

மூலக்கதை