இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டு திருத்த பணிகள்... இனி சுலபம்! தாலுகா அலுவலகத்துக்கு அலையும் அவசியம் இல்லை!

தினமலர்  தினமலர்
இசேவை மையங்களில் ரேஷன் கார்டு திருத்த பணிகள்... இனி சுலபம்! தாலுகா அலுவலகத்துக்கு அலையும் அவசியம் இல்லை!

திருப்பூர் : "ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படவுள்ளதால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்வது, பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் என, அனைத்து பணிகளும், இனி பொது "இ-சேவை' மையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. ரேஷன் கார்டு பணிக்காக, தாலுகா அலுவல கங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம், இனி இருக்காது.
திருப்பூர் மாவட்டத்தில், 7.43 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தன. பொது வினியோக திட்டம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பிறகு, ரேஷன் கடையில் "பாயின்ட் ஆப் சேல்' கருவி கொண்டு வரப்பட்டது. கார்டில் உள்ளவர்களின் ஆதார், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள், அதில் பதிவு செய்யப்பட்டன. ஆதார் விவரங்களை பதியாத கார்டுகள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஆதார் பதிவு செய்தால், மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போதைய நிலவரப்படி, 6.71 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், 6.48 லட்சம் (97 சதவீதம்) கார்டுகள், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் பதிவு செய்த கார்டுகளாக உள்ளன. ஆதார் பதிவு செய்தவர்களின் அடிப்படையில் "ஸ்மார்ட்'கார்டு வழங்கப்பட உள்ளது. "ஸ்மார்ட்' கார்டு பணிக்காக, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டு திருத்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விவரங்களும் "ஆன்-லைனில்' பதிவு செய்யப்பட்டுள்ளதால், வருங்காலத்தில், "ஆன்-லைன்' மூலமாக மட்டுமே, அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்ள முடியும்.புதிய கார்டு கேட்டு விண்ணப்பம் செய்வது, பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், "மொபைல்' எண் மாற்றம், கடை மாற்றம் என, அனைத்து வகையான பணிகளையும், "ஆன்-லைன்' மூலமாக மேற்கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் பொது "இ- சேவை'மையங்கள் வாயிலாக, இப்பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம்; இதற்காக, தாலுகா அலுவலங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளையும், இனி "இ-சேவை' மையங்கள் வாயிலாகவே மேற்கொள்ளலாம். இது குறித்து, பொது "இ-சேவை' மையங்களில் உள்ள ஆப்ரேட்டர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கூட்டுறவு பொதுசேவை மைய பணியாளர்களுக்கு, ரேஷன்கார்டு தொடர்பான பணிகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. இம்முகாமை, கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்தார்.கூட்டுறவு இணை பதிவாளர் குமார், மின்னாளுமை திட்ட "இ- மேலாளர்' சம்பத் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

மூலக்கதை