அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் மூலம் ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டது. பின்னர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆதார் அட்டையை செயல்படுத்திவருகிறது. அரசின் அனைத்து வகையான திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது.முதலில் சமையல் கியாஸ் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. ரெயில்வேயில் சலுகையை பெற, வருமான வரி தாக்கல் செய்ய பான்கார்டு பெறுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும், வங்கி கணக்கு தொடங்குவதற்கு, செல்போன் இணைப்பு பெறுவதற்கு, வாகனங்கள் பதிவு செய்யப்படுவதற்கு, டிரைவிங் லைசென்ஸ்சுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது.அதுமட்டுமின்றி போலியான இணைப்புகள், மோசடிகளை தடுக்க மத்திய அரசு ஆதாரை அனைத்து வகையிலும் கட்டாயமாக்கி வருகிறது. இதன் மூலம் அரசின் பல்வேறு திட்ட செலவுகள் குறைவதால் ஆதாரை நிதி மசோதாவுடன் இணைத்து சட்டமாக்கி வருகிறது.ஆதாரை கட்டாயப்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டது. அப்போது தனி மனிதனின் விவரங்கள் வெளியே தெரியவருவது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. அதோடு பல்வேறு நிபந்தனைகளுடன் ஆதாரை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்படுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை, வேறு ஆதாரங்களையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. ஒருவரிடம் ஆதார் கார்டு இல்லை என்றால், குடும்ப அட்டை, ஓட்டுநர் அட்டை உள்ளிட்ட வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

மூலக்கதை