நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேச்சு: ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் சுமூகமாக நிறைவேற்றப்படும்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ‘‘ஜிஎஸ்டி மசோதாக்களை ஒருமித்த கருத்து அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம்’’ என்று மத்திய நிதியமைச்சர்  அருண்ஜெட்லி தெரிவித்தார். பாஜ நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும்  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் சமீபத்தில் பாஜவில் இணைந்த  எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பாஜ எம்பிக்கள் மத்தியில்  உரையாற்றினார். பின்னர் அருண் ஜெட்லி கூறியதாவது: மக்களவையில் நேற்று மத்திய ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி  மற்றும் இழப்பீட்டு மசோதா என 4 துணை மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் அனைத்தும் ஒருமித்த கருத்து  அடிப்படையில் தான் நிறைவேற்றப்படும். இந்த மசோதாக்கள் ஒரே நாடு, ஒரே வரி விதிப்பு என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியும் ஜிஎஸ்டி  மசோதாவை அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தார். ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரும் ஜூலை 1ம்  தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த வரி விதிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் வரை உயரும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.காங்கிரஸ் எதிர்ப்பு: இந்த நிலையில் ஜிஎஸ்டி மசோதாவின் தற்போதைய வடிவத்தை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி  தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதில், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜிஎஸ்டி  மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்பவும், விவசாய கடனை தள்ளுபடி  செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

மூலக்கதை