விதிமீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எப்போது:களம் இறங்குவார்களா ஆர்.டி.ஓ.,க்கள்

தினமலர்  தினமலர்
விதிமீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எப்போது:களம் இறங்குவார்களா ஆர்.டி.ஓ.,க்கள்

மதுரை;மதுரையில் விதிமீறலில் தொடர்ந்து ஈடுபடும் டீசல் ஆட்டோக்கள் மீது புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் (ஆர்.டி.ஓ.,) நடவடிக்கை பாயுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.மதுரையில் அனுமதியின்றி 3500க்கும் மேற்பட்ட டீசல் ஆட்டோக்கள் இயங்குகின்றன. பொருட்களை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 'ஷேர்' ஆட்டோக்களை போல் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்கிறது.
இருப்பினும் பிழைப்பை கெடுக்க வேண்டாம் எனக்கருதி, 'மூன்று பேருக்கு மேல் அனுமதி இல்லை' என ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பல முறை எச்சரித்தும் பலனில்லை. வழக்கம்போல் இஷ்டத்துக்கு கூடுதல் ஆட்களை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கின்றனர்.
அடிக்கடி விபத்து
உசிலம்பட்டியில் சமீபத்தில் ஆட்டோவில் பத்துக்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு பயணித்தபோது எதிரே வந்த பஸ்சில் மோதி நான்கு பேர் பலியாகினர். பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தில் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன் நாகமலை ஆட்டோ டிரைவர் பாண்டி, பாலத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினார். தட்டிக்கேட்ட பெரியார் பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன் உட்பட மூவரை தாக்கி விட்டு தப்பினார். விதி மீறலில் ஈடுபடுவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
நடவடிக்கை தேவை
மதுரை மத்தியம் கல்யாணகுமார், வடக்கு கருப்பசாமி, தெற்கு சுரேஷ் ஆகியோர் புதிய ஆர்.டி.ஓ..,க்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் குழுவாக சென்று திடீர் ஆய்வில் ஈடுபட்டு விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்கள், டீசல் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்கள் மட்டுமின்றி, விதிமீறும் பிற வாகன ஓட்டிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை