வாக்காளர் அட்டை பெற இளைஞர்கள் ஆர்வம்: ஆண் வாக்காளர்கள் பதிவு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டத்தில் 18வயது முதல் 19 வயது வரை உள்ள புதிய ஆண் வாக்காளர்கள், தேர்தல் அடையாள அட்டை பெறுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சென்னை ஐகோர்ட், 'மே., 12க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சென்னை ஆர்.கே.,நகர் இடைத் தேர்தலுக்கு பின், எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு உள்ளது.
இதனால் அதற்கான வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைப்புப் பணிகளை கவனிக்குமாறு மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜன.,5ல் வரைவு வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஆண் வாக்காளர் 8 லட்சத்து 56 ஆயிரத்து 925 பேர், பெண் வாக்காளர் 8 லட்சத்து 85 ஆயிரத்து 135 பேர், மூன்றாம் பாலினத்தவர் 148 பேர் என மொத்தம் 17 லட்சத்து 42 ஆயிரத்து 208 வாக்காளர் உள்ளனர். அதில் பெண் வாக்காளர்கள் 28 ஆயிரத்து 210 பேர் அதிகமாக உள்ளனர்.

இளைஞர்கள் அதிகரிப்பு: மேலும், இதுவரை பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள இளம் வாக்காளர்களில் 18 முதல் 19 வயதுள்ளோர் அதிகரித்துள்ளனர். இதில் இளம் பெண்களை விட இளைஞர்களே அதிகமுள்ளனர். இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டுவதாக மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கல்லுாரி மாணவர் மத்தியில் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. அதனால் இறுதி வாக்காளர் பட்டியலில் புதிய ஆண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இறுதிப் பட்டியலில் புதிய வாக்காளர்கள் (18 வயது முதல் 19 வயது வரை) 19 ஆயிரத்து 528 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 10 ஆயிரத்து 896 பேர் இளைஞர்கள். அதேபோல் தற்போதுவரை பதிவு செய்த வரைவு பட்டியல் படி 16 ஆயிரத்து 669 இளம் வாக்காளர்களில் 9 ஆயிரத்து 469 பேர் இளைஞர்கள். இதன் மூலம் 'இளைஞி'களைவிட இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது தெரிகிறது, என்றார்.

மூலக்கதை