ஜிப்மரில் ரத்தப்புற்று நோயியல், ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையில் உயர்கல்வி : பரிஜா தகவல்

தினமலர்  தினமலர்
ஜிப்மரில் ரத்தப்புற்று நோயியல், ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையில் உயர்கல்வி : பரிஜா தகவல்

புதுச்சேரி : 'எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு சராசரியாக 20 நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்' என்று ஜிப்மர் இயக்குநர் பரிஜா கூறினார்.ஜிப்மரில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, ௨௦௧௩ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. இதன் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்று நலமுடன் வாழ்பவர்களை, ஜிப்மர் இயக்குநர் பரிஜா நேற்று கவுரவித்தார்.அப்போது அவர் பேசுகையில், 'புதுச்சேரி மற்றும் தமிழகத்தை பொறுத்தமட்டில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கும் ஒரே அரசு நிறுவனம் ஜிப்மர் ஆகும். பல்வேறு நிதி திட்டங்கள் மூலம் இங்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு, சர்வதேச தரத்தில் அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. சராசரியாக 15 முதல் 20 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். இத்துறை விரிவாக்கத்தால் காத்திருப்புப்பட்டியல் குறையும். இத்துறையை 8 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டம் உள்ளது. ரத்தப் புற்று நோயியல், ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையில் உயர்கல்வி, ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும்' என்றார்.எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்மித்தாகாயல் பேசுகையில், ' ஸ்டெம்செல்ஸ் மூலம் செயல்படுத்தப்படும் இந்த சிகிச்சை மிக நுட்பமானதும், தனித்துவம் பெற்றதாகும். ரத்தவங்கி, மருத்துவ குருதியியல், கதிரியக்க சிகிச்சை, நோயியல், நுண்ணுயிரியல், நோய் எதிர்ப்பியல் மற்றும் மருந்தியல் போன்ற பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்டு கூட்டு சிகிச்சையாக வழங்கப்படுகிறது. இச் சிகிச்சை இதுவரை 67 நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்றவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுவாமிநாதன், ஆராய்ச்சி முதல்வர் டாக்டர் விஷ்ணுபட், மருத்துவ புற்று நோயியல் துறை தலைவர் டாக்டர் பிஸ்வஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மூலக்கதை