தேர்தல்களுக்கு தயாராகுங்கள்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
தேர்தல்களுக்கு தயாராகுங்கள்

இவ்வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் நடத்தப்படும். ஆகையினால், அத்தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.   

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழுள்ள ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்களை, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், திங்கட்கிழமை (27) இரவு சந்தித்தபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   

இந்தத் தேர்தல்களில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது பலமிக்கதொரு கட்சியாகக் களத்தில் இறங்கவேண்டும் என்றும் பலவீனமான தொகுதி அமைப்பாளர் சகலரும் இரண்டொரு மாதங்களுக்குள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாகப் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.   

இதேவேளை, ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியன்று நடத்தப்படவிருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மாநாடு மற்றும் மே தினம் ஆகியவற்றில் தங்களுடைய பலத்தை காண்பிப்பதற்கு பூரணமான ஒத்துழைப்பை நல்குமாறும் முதலமைச்சர்களிடம் ஜனாதிபதி கேட்டுகொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷால ஜயரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் மாநாடு, மே தினம் உள்ளிட்டவை பற்றி இந்தச் சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை, காலியில் செய்ததைப் போல, செய்கின்ற கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை உடனடியாக நீக்கிவிட்டு,  அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பதற்கும் இந்தச் சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டது.   

தொகுதிகளுக்கு தங்களை அர்ப்பணித்து வேலை செய்யாதவர்கள் இருப்பார்களாயின், அவ்வாறானவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.   

ஒவ்வொருவருடைய மேடைகளில் ஏறிக்கொண்டு, ஒவ்வொரு குறைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், பலமிக்கதொரு கட்சியாக முன்னோக்கிச் செல்வதற்கு சகலரும் கைகோர்ப்பதாக முதலமைச்சர்கள் இதன்போது தெரிவித்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்

மூலக்கதை