நிலப் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது

தமிழ் MIRROR  தமிழ் MIRROR

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர்,  மக்களுக்குப் பதில் கூறாமல், மக்களின் நிலப் பிரச்சினையை வருடக்கணக்கில் இழுத்தடிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், நேற்று (28)  செவ்வாய்க்கிழமை 6ஆவது  நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் முன்னெடுக்கப்படும் முள்ளிக்குளத்துக்கு  வருகைதந்த அவர், அப்போராட்டத்துக்கு  ஆதரவு தெரிவித்துவிட்டு, போராட்டக்காரர்களுடன் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினார். அதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு எங்களினால் முடிந்த முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்.

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர், மக்களுக்குப் பதில் கூறாமல், வருடக்கணக்கில் மக்களின் நிலப் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது.

மக்களின் தொடர் போராட்டங்களின் மத்தியிலே கேப்பாப்புலவு பகுதியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தமது நிலங்களை மீட்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையிலே முள்ளிக்குளம் மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

காணிகளை விடுவிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்’ என அவர் தெரிவித்தார்.

போராட்டக் களத்துக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சி.பாஸ்கரா, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் றீகன் ஆகியோர் நேற்றையதினம் வந்திருந்தனர்.

மூலக்கதை