நான் ஈழம் செல்வேன் என்னை எதிர்க்காதீர்கள்’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
நான் ஈழம் செல்வேன் என்னை எதிர்க்காதீர்கள்’

வருங்காலத்தில் ‘நான் ஈழம் செல்வேன். அப்போதும் என்னை எதிர்க்காதீர்கள்’ என்று சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த், எங்களிடத்தில் கேட்டுக்கொண்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.  

இலங்கைப் பயணத்தை தவிர்ப்பது நல்லது என்ற கோரிக்கையை சுப்பர் ஸ்டார் ரஜினி காந்திடம் நாம் வைத்தோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றுதான் இந்தக் கோரிக்கையை வைத்தோம். எங்கள் கருத்தை குதர்க்கமாக, ரஜினி காந்த்; புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

ரஜினி காந்தை இலங்கைக்குப் போக வேண்டாம் என ஏன் சொன்னோம்? என்பது தொடர்பில் செய்தியாளர்கள் நேற்று (28) சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூட்டாக விளக்கமளித்தனர். இதன்போதே, திருமாவளவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,  

“ரஜினிகாந்திடம் நாங்கள் விடுத்த வேண்டுகோளுக்குப் பதில் வேண்டுகோளாக,  ஒரு வேண்டுகோளை ரஜினிகாந்த் விடுத்தார். வருங்காலத்தில் “நான் ஈழம் செல்வேன். அப்போதும் என்னை எதிர்க்காதீர்கள்” என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார் என்றும் திருமாவளவன் கூறினார்.  

எனினும், லைக்கா நிறுவனம் நடத்தும் விழாவுக்குச் செல்ல வேண்டாம் என்ற வேண்டுகோளை ஏற்று இலங்கை செல்லாமல் நிறுத்திய நடிகர் ரஜினிக்கு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்ப்பதற்கும் என்றைக்கு வேண்டுமானாலும் இலங்கைக்குச் செல்லலாம். அங்கிருக்கும் மக்கள் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். நாங்களும் அதனை எதிர்க்கப் போவதில்லை என்று நாங்கள் மூன்று கட்சிகளின் சார்பில் இன்றைக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.  

இலங்கையில், இப்போதிருக்கும் சூழல் சரியில்லை. தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் அங்கே கொந்தளித்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கலாம். அதனால் ரஜினிகாந்த்துக்கு தெரியாமல் இருக்கலாம்.  

இலங்கையில், ஆறு தமிழர்களுக்கு ஒருவர் என்ற முறையில் சிப்பாய்களை வைத்து இராணுவம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் இளம் ஆண்கள், பெண்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.  

ஒரு இலட்சம் பெண்கள் கணவர்களை இழந்து வாழ்வாதாரத்துக்கே போராடி வருகிறார்கள். அவர்களை இராணுவம் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடியிருப்புகளை இராணுவம் பிடிங்கிக் கொள்கிறது. அவர்கள் வளங்களை இழந்துள்ளனர்.  

இராணுவ நிலைகள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கின்றன. இராணுவ முகாம்களை கணிசமாகக் குறைத்துக் கொள்கிறோம் என்று அரசாங்கம் வாக்குறுதி அளித்ததே தவிர, வாபஸ் பெறப்படவில்லை. ஆக, மஹிந்த ராஜபக்ஷ காலத்தை விட மிக மோசமாக மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  

அப்படிப்பட்ட மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன், உறவு கொண்டாடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள், லைக்கா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதனாலும் இலங்கைத் தமிழர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆக, இதுபோன்ற காரணங்களால்தான் நாங்கள் ரஜினிகாந்த்தை இலங்கை செல்லக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தோமே தவிர, வேறு எந்தக் காரணமும் கிடையாது.  

இந்த இடத்தில்தான் லைக்கா நிறுவனத்தின் பெயரை நாங்கள் சொல்ல நேர்ந்தது. லைக்கா நிறுவனம் யார் என்பதும் அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். அதனை நாங்கள் நாங்கள் சொல்ல விரும்பவில்லை. லைக்கா நிறுவனத்தினர் என்ன வதந்தி பரப்பினாலும் அது பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை. ஆனால், ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ள லைக்கா நிறுவனம், இந்த வீடுகளை கட்டுகிறபோது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை வைத்துத்தான் அடிக்கல் நாட்டினார்கள் என்பது கூடுதலான தகவலாகும்” என்றார்.  

“இந்த அரசியல் எல்லாம் ரஜினிகாந்த்துக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். அவர் எங்களது வேண்டுகோளை ஏற்று உடனடியாக தான் செல்லவில்லை என்பதை அவர் அறிவித்திருக்கிறார். அவருடைய முதிர்ச்சியான இந்த அணுகுமுறைக்கு எங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’”என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

மூலக்கதை