மூடுவிழாவை நோக்கி சிப்காட் பணி:ஏழு மாதம் சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்

காரைக்குடி;காரைக்குடியில் சிப்காட் அமைக்கும் பணி, மூடுவிழாவை நோக்கி செல்கிறது.இதற்கான நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆர்.ஐ., சர்வேயர்கள், அலுவலர்களுக்கு கடந்த ஏழு மாதத்துக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில், திருப்புத்துார் தாலுகாக்களில் பெரிய தொழிற்சாலை இல்லை. காரைக்குடி தாலுகாவில் எண்ணெய் ஆலை, அரிசி ஆலைகள் மட்டுமே உள்ளன. கல்வி வளர்ச்சியில் முன்னேறி இருந்தாலும், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது. வேலை வாய்ப்புக்கு வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் நிலையில் தான் மாவட்ட மக்கள் உள்ளனர். இதையடுத்து அரசனுார், காரைக்குடியில் சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்தார்.அரசனுாரில் 1200 ஏக்கரிலும், காரைக்குடியில் கழனிவாசல், திருவேலங்குடி குரூப்பில் உள்ள 1253 ஏக்கரிலும் சிப்காட் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகளுக்கான சர்வே பணி தொடங்கியது. காரைக்குடியில் 2016 பிப்ரவரியில் இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டுபணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. நான்கு தாசில்தார்கள், 4 டைப்பிஸ்ட் பணிகள் நிரந்தர பணியிடமாகவும், 4 ஆர்.ஐ.,க்கள், 8 நில அளவையர், 4 உதவியாளர் பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்கள் தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டனர். நான்கு யூனிட்டுகளாக பிரிக்கப்பட்டு அலுவலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டனர்.
ஓராண்டு கடந்த நிலையில், இதுவரை சிப்காட் அமைப்பதற்காக எவ்வித பணிகளும் மேற்கொள்ளவில்லை. நில எடுப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியில் சென்று பார்வையிட்டனரே தவிர வேறு எவ்விதி பூர்வாங்க பணிகளையும் மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்லும் வேலையை மட்டும் பார்த்து செல்கின்றனர்.
அதுமட்டுமன்றி தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஏழு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஓராண்டுக்கு பின் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். ஓராண்டு முடிந்தும் இதுவரை பணி நீட்டிப்புக்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தாங்கள் பணியில் தொடர்கிறோமா இல்லையா என்ற சந்தேகத்தில் இங்கு பணியாற்றுபவர்கள் உள்ளனர். காரைக்குடி ஆதிஜெகநாதன் கூறும்போது: தொ ழில் வளம் இல்லை, மக்கள் வெளிநாடு சென்று வருகின்றனர். வெளிநாடுகளில் வேலைக்கு சென்றவர்கள் திரும்பி இப்பகுதிக்கு வரும்போது எவ்வித வேலையும் இல்லை. அதற்காகத்தான் சிப் காட் வளாகம் அமைக்க அரசு முடிவு செய்தது.
நிலத்தை எடுக்க அதிகாரிகள் வரும்போது, ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், ரயில்வே ஸ்டேஷன், ரோடு வசதி இருப்பதால் இப்பகுதியில்தான் அமைக்கப்படும் என கூறினர். செட்டிநாட்டை குட்ெஷட் ஸ்டேஷனாக அறிவித்தனர். கண்டவராயன்பட்டியிலிருந்து காவிரி குடிநீர் இப்பகுதிக்கு சப்ளை செய்யப்படும் என்றனர். ஆனால், கடந்த ஓராண்டாக எவ்வித பணியும் நடக்கவில்லை.
சிப்காட் குழு வந்து பார்வையிட வேண்டும் என கூறுகின்றனர். எப்போது வரும் என்று தெரியவில்லை. தொழில் வளத்தை மேம்படுத்த விரைவில் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும், என்றார். சிப்காட் அமைக்கப்படும் என்பதால், அப்பகுதியில் இடம் வாங்கிய ஏராளமானோர் நிலங்கள் விலை போகாமல் உள்ளன. சிப்காட் அமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அல்லது அப்பகுதியில் சிப்காட் வராது என்பது குறித்தான தீர்வான முடிவை அரசு அறிவிக்க வேண்டும், என்பது காரைக்குடி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மூலக்கதை