புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் பெறுவது... நிறுத்தம் ஏப்ரல் முதல் வாரம் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கல்

தினமலர்  தினமலர்
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் பெறுவது... நிறுத்தம் ஏப்ரல் முதல் வாரம் ஸ்மார்ட் கார்டு வழங்கல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்கும் பணி துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கவும், போலி ரேஷன் கார்டுகளை நீக்கவும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடலுார் மாவட்டத்தில், 7 லட்சம் கார்டுகள் உள்ளன. 'ஸ்மார்ட் கார்டு' வழங்க ரேஷன் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவி மூலம் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யும் பணி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது.மாவட்டத்தில் 3 லட்சத்து 71 ஆயிரம் கார்டுதாரர்கள் ஆதார் எண்ணை முழுவதுமாகவும், 2 லட்சத்து 92 ஆயிரத்து 709 பேர் பாதியாகவும் பதிவு செய்துள்ளனர். 2,041 பேர் முழுவதுமாக பதிவு செய்யாமல் உள்ளனர். 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி சென்னையில் முதல் கட்டமாக துவங்குகிறது. முன்னுரிமை உள்ளவர்கள், முன்னுரிமையற்றவர்கள் என, இரு வகையாக பிரிக்கப்பட்டு கார்டு வழங்கப்படுகிறது. முன்னுரிமை உள்ளவர்கள் வகை கார்டில் குடும்பத்தில் வயதான பெண்ணின் புகைப்படமும், முன்னுரிமையற்றவர்கள் வகை கார்டில் பெற்றோரில் விரும்பிய ஒருவரின் புகைப்படமும் இடம் பெறும். இந்த இருவகை கார்டுகளுக்கும் வழக்கமாக வழங்கப்படும் பொருட்களில் எந்த மாற்றமும் இருக்காது. கடலுார் மாவட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி துவங்க உள்ளது. இதனால், மாவட்டத்தில் தாலுகா வாரியாக குடிமைப்பொருள் தனி தாசில்தார் அலுவலகங்களில் புதிய ரேஷன் கார்டு பெறுதல், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள், குடிமைப் பொருள் தனி தாசில்தார் அலுவலகங்களில் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கக் கூடாது எனவும், மாறாக ரேஷன் கடை அருகில் உள்ள அரசு கட்டடங்களில் மட்டுமே கார்டு வழங்க வேண்டுமெனவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் கார்டில்' புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்திற்கு அரசின் இ-சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய கார்டுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறையும் விரைவில் துவங்க உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்கும் பணி ஏப்ரல் முதல் வாரம் துவங்க உள்ளது. ஆதார் எண் பதியாதவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் எண் முழுவதுமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கார்டு வழங்கப்படும். மொபைல் எண் பதியாததால் ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.எனவே, மொபைல் எண்ணையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்றார்.

மூலக்கதை