பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்... பாலித்தீன் பைகளுக்கு 'குட் பை!' உற்பத்தியை முடக்க வணிகர்கள் கோரிக்கை!

தினமலர்  தினமலர்
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்... பாலித்தீன் பைகளுக்கு குட் பை! உற்பத்தியை முடக்க வணிகர்கள் கோரிக்கை!

ஐம்பது மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது; வணிகர்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு, உற்பத்தியை முடக்க வேண்டுமென்ற கோரிக்கையை, மாநகராட்சி நிர்வாகம் நிராகரித்து விட்டது.
கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையில், பாதிக்குப்பாதி பிளாஸ்டிக் கழிவுகளாக இருப்பதால், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், தோல்வியடைந்து வருகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரித்து சேகரித்தாலும், மறுசுழற்சிக்கு பயன்படாத குப்பையை அழிக்க முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் திணறுகிறது. கால்வாய், குளங்கள், மழை நீர் வடிகால் என எல்லா இடங்களிலும், பாலித்தீன் பைகளால் அடைபட்டுக் கிடக்கின்றன.முயற்சிகள் பல...முன்பெல்லாம், பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே, 40 மைக்ரானுக்குக் குறைவான பாலித்தீன் பைகள் பயன் படுத்தப்பட்டன. இப்போது, பார்சல் டீ, பார்சல் சாப்பாடு என எல்லாமே, மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பைகளில் போட்டுத் தரப்படுவது அதிகரித்துள்ளது. இயற்கை உரம் தயாரித்தல், மண் புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சிக்கு பிரித்தல், காய்கறி கழிவில் இருந்து காஸ் தயாரித்து, தெருவிளக்கு எரியூட்ட பயன்படுத்துதல் என, எண்ணற்ற பணிகளை மேற்கொண்டாலும், பிரச்னை தீர்ந்த பாடில்லை.இதனால், 50 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டையும், விற்பனையையும் முற்றிலும் ஒழிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை களமிறங்கி உள்ளது. வார்டு வார்டாக சென்று, கடைகளில் ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்வதோடு, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இது, வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உற்பத்தியை தடை செய்யாமல், சிறு வணிகர்கள் மீது நடவடிக்கையை ஏவுவதா என, கேள்வி எழுப்புகின்றனர்.கோவை கணபதி வணிகர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் கூறுகையில், 'உற்பத்தியாளர்களிடம் இருந்து விற்பனைக்கு கடைக்கு வரும் பிளாஸ்டிக் பொருட்களில், 51 மைக்ரான் என முத்திரை இடப்படுகிறது; அதை நம்பி, கொள்முதல் செய்து, விற்பனை செய்கிறோம். அதன் தரம் உற்பத்தியாளருக்கு மட்டுமே தெரியும். எனவே, வியாபாரிகள் மீது எடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு, உற்பத்தியை தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தானியங்கள், பாக்கு மட்டை, தேங்காய் சிரட்டை, துணி மற்றும் காகிதங்களால் செய்த தயாரிப்புகளை பயன்படுத்த ஊக்கப்படுத்தினால் மட்டுமே, பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக ஒழிக்க முடியும்' என்று தெரிவித்துள்ளனர்.மாநகராட்சி திட்டவட்டம்!இது, வணிகர்களின் தரப்பு கருத்தாக இருந்தாலும், 50 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலும், பயன் படுத்தினாலும், இருப்பு வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என, மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இந்த விஷயத்தில், வணிகர்கள், பொது மக்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்த தடையை இன்னும் தீவிரமாக செயல்படுத்துவதே, நகரின் வளர்ச்சிக்கு நல்லது.
-நமது நிருபர்-

மூலக்கதை