நாளை ரிலீசாகும் ‘கிரேட் பாதர்’ மம்மூட்டி பட காட்சிகள் பேஸ்புக்கில் வெளியானது

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் மம்மூட்டி நடித்த ‘கிரேட் பாதர்’ என்ற படம் ெவளியாவதற்கு முன்பே பேஸ்புக்கில் கிளைமாக்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்த ‘கிரேட் பாதர்’ என்ற படம் நாளை(30ம் தேதி) வெளியாக உள்ளது. இந்த படத்தில் தமிழ் நடிகை ஸ்னேகா கதாநாயகியாக நடித்துள்ளார். புதுமுக இயக்குநரான ஹனீப் ஆதேனி இப்படத்தை இயக்கியுள்ளார். நாளை படத்தை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் செய்து வந்தார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் நேற்று, ‘கல்சர் அன்ட் ஆர்ட்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியானது. செல்போனில் எடுக்கப்பட்ட இக்காட்சிகளை வெளியான ஒருசில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பேஸ்புக் பக்கம் உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் தெரிவித்தார். படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் முக்கிய காட்சிகள் வெளியானது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை