சிறை நிர்வாகம் அனுமதியளித்தாலும் வெளி உணவுகளை தவிர்க்கிறார் சசிகலா: பயம் காரணம் என்று தகவல்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர்  சசிகலாவுக்கு வெளியில் இருந்து வரும் உணவை சாப்பிட சிறை நிர்வாகம்  அனுமதி வழங்கினாலும்  பயம் காரணமாக அதை சாப்பிட அவர் மறுப்பதாக  தெரியவந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு  கடந்த மாதம் 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா,  இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில்  அடைக்கப்பட்டு நேற்றுடன் 42 நாட்கள் கடந்துள்ளது.  கர்நாடக சிறைதுறை சட்டம்  1963ன் 35வது பிரிவின் படி சசிகலாவுக்கு அவர் விரும்பும் ஆடைகள் அணிந்து  கொள்ள அனுமதி வழங்கியுள்ளதால், அவர் சிறை சீருடை அணியால் சொந்த உடை  அணிந்து கொள்கிறார்.அதே சமயத்தில் சிறை விதிமுறைகள் மீறி அவருக்கு சில  சலுகைககள் வழங்கியுள்ளதாக சிறை வட்டாரம் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் அதை   சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். தன்னை பார்க்க வரும்  கட்சி பிரமுகர்களை சந்திக்க தவிர்க்கும் சசிகலா, வக்கீல் செந்தில் உள்பட  சிலரை மட்டும் அடிக்கடி சந்தித்து பேசுவதாக சிறை ஊழியர்கள் மூலம்  தெரியவந்துள்ளது. சிறையில் கூழ் குடிக்கும் சசிகலா: சமீப  நாட்களாக சிறையில் உள்ள சசிகலாவுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  தினமும் நூற்றுக்கணக்கில் கண்டனக் கடிதங்கள் வருகிறது. அதில், ஜெயலலிதா மரணத்திற்கு  அவரே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் அதிகமுள்ளது. இந்த கடிதஙகள்  சசிகலாவுக்கு ஒருவித பயம் மற்றும் படபடப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறை  நிர்வாகம், சசிகலாவுக்கு வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிட அனுமதி  வழங்கியுள்ளது. இருப்பினும் பயம் காரணமாக, வெளியில் இருந்து வரும் உணவுகளை முழுமையாக அவர் தவிர்த்து விடுவதாக  தெரிய வந்துள்ளது. இதனால் சிறையில் வழங்கும் உணவை சாப்பிடும் அவர் கோடைக்காலம் என்பதால்  தினமும் கேழ்வரகு கூழ், சாம்பார்-சாதம், சப்பாத்தி அதிகம் விரும்பி  சாப்பிடுகிறார். சிறை வளாகத்தில் உள்ள பேக்கரியில் கிடைக்கும் பிரட், பன்,  பிஸ்கட் வாங்கி சாப்பிடுகிறார். வெளியில் இருந்து வரும் உணவு  மட்டுமில்லாமல், பால், பழங்கள், பிஸ்கட்களை கூட வாங்க மறுப்பதாக சிறை  ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது. சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில்  கொண்டு அவரை சந்திக்க வரும் பிரமுகர்களிடம் நீண்ட விசாரணைக்கு பின் சிறை  கண்காணிப்பாளர் அறை எதிரில் உள்ள காலி அறையில் சந்திக்க  அனுமதிக்கப்படுகிறது. பெண்கள் பிரிவு சிறை கண்காணிப்பாளர் அனிதாவின்  பாதுகாப்பில் தான் அவர் விஐபிகளை சந்திக்கிறார். தமிழ் பேச தெரிந்த மூன்று  ஊழியர்கள் அடிக்கடி சசிகலாவிடம் சென்று தேவையான உதவிகள் செய்து  வருகிறார்கள். சிறையில் இளவரசி தவிர வேறு யாருடனும் பேசாமல் தனிமையாக  இருக்கும் அவர் அதிக நேரம் புத்தகம் படிப்பதில் செலவிடுவதாக சிறை ஊழியர்கள்  தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை