உச்ச நீதிமன்றம் உத்தரவு: லோக்பால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: லோக்பால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்தக்  கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பொதுமக்களின் பணத்தை கையாடல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் கடந்த 2013ல் லோகபால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா ெகாண்டு வரப்பட்டது. இதன்படி மத்திய அரசை லோக்பால் மூலமும் மாநில அரசை லோக்ஆயுக்தா மூலமும் விசாரிக்க வகை செய்யும் வகையிலான மசோதா கடந்த 2013ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட 8 பேர் கொண்ட தேர்வுக் குழு, லோக்பால் அமைப்பில் இடம் பெறும் நீதிபதிகளை தேர்வு செய்வார்கள். இந்த நிலையில் லோக்பால் அமைப்பை விரைவில் உருவாக்க கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வக்கீல் சாந்திபூஷன் மூலம் வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘`லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013 படி லோக்பால் தேர்வு கமிட்டியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் முக்கிய பங்கு வகிக்கிறார். தற்போது நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரசுக்கு   மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அந்த இடம் காலியாக உள்ளது. மேலும் லோக்பால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தற்போதைய நிலையில், லோக்பால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்த முடியாது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘அனைத்து கட்சியினரிடமும் வழக்கு தொடர்பாக கருத்து கேட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

மூலக்கதை