அருண் ஜெட்லியுடனான பேச்சு தோல்வி; ஜனாதிபதியை சந்தித்து தமிழக விவசாயிகள் மனு: போராட்டம் தொடரும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடனான பேச்சு தோல்வி அடைந்த நிலையில், அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில், போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதி முழுமையாக ஒதுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 90 விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 14ம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 15வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.தமிழக விவசாயிகளுக்கு பஞ்சாப், அரியானா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள், டெல்லியில் உள்ள தமிழர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதுதவிர, அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் கல்லூரி மாணவர்களும் தமிழகத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லியில் நேற்றைய போராட்டத்தின்போது, ஒரு விவசாயி கோட், சூட்டுடன், மோடி போன்று முகமூடி அணிந்து பங்கேற்றார். மற்ற விவசாயிகள், காந்தி படங்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம் தொடரும்: இதற்கிடையே, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை திமுக எம்பி திருச்சி சிவா தலைமையில் சென்று விவசாயிகள் சந்தித்து பேசினர். பின்னர் அய்யாக்கண்ணு கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை அமைச்சர் அருண் ஜெட்லி கவனமாக கேட்டார். வறட்சியால் நிலை குலைந்துபோன விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது கொள்கை சார்ந்த முடிவு என்பதால் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்று ஜெட்லி கூறினார். மேலும் நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை எழுந்தால் என்ன செய்வது என்றும் கேட்டார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த பெரும் நடவடிக்கையையும் எடுத்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று எடுத்துக் கூறினோம். மத்திய அமைச்சர் ஜெட்லியுடன் இதுவரை நடந்த சந்திப்புகளைக் காட்டிலும் தற்போது சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக இருந்தது. இருந்தபோதிலும், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும். இவ்வாறு அய்யாகண்ணு தெரிவித்தார். அருண் ஜெட்லி உடனான பேச்சு ேதால்வி அடைந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் விவசாயிகள் நேற்று மாலை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயம் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ள விவசாயிகளை சரியாக கணக்கிட்டு அவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது என்றார். முன்னதாக நேற்று காலை அதிமுக சசிகலா அணி எம்.பி. தம்பிதுரை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி உள்ளிட்டோர் விவசாயிகளை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

மூலக்கதை