மார்ச்சிலும் ஆரம்பமாகாத 'வட சென்னை' படப்பிடிப்பு

தினமலர்  தினமலர்
மார்ச்சிலும் ஆரம்பமாகாத வட சென்னை படப்பிடிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு 2016ம் வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமானது. அப்போது சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்தினார்கள். படத்தை மூன்று பாகமாக உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார்கள். 'வட சென்னை' படத்தில் தனுஷ் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் 30 வருட வாழ்க்கைதான் படம் என்றும் செய்திகள் வெளியானது.

சமந்தாவை முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு தாமதம் ஆனதால் அவர் படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தனுஷ், 'பவர் பாண்டி' படத்தை இயக்கப் போவதாக அறிவித்ததும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, ஜனவரி மாதம் 'வட சென்னை' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். மார்ச் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானதாகத் தகவலே இல்லை.

தனுஷ், தான் இயக்கி முடித்துள்ள 'பவர் பாண்டி' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளிலும், நாயகனாக நடித்து வரும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திலும் பிஸியாக இருக்கிறார். அதனால், ஏப்ரல் மாதம் தான் 'வட சென்னை' படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள். இருந்தாலும் வெற்றிமாறனோ, தனுஷோ அது பற்றி அறிவித்தால்தான் 'வட சென்னை' படத்தின் உண்மையான நிலை என்ன என்பது தெரிய வரும்.

மூலக்கதை