ஒரே நாளில் கோலிவுட்டில் மூன்று துக்க சம்பவங்கள்

தினமலர்  தினமலர்
ஒரே நாளில் கோலிவுட்டில் மூன்று துக்க சம்பவங்கள்

கோலிவுட்டில் ஒரே நாளில் மூன்று துக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழும் சூரியின் தந்தை முத்துசாமி, மதுரை, ஒத்தக்கடை ராஜாக்கூரில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75, இவரது உடல் அஞ்சலிக்காக மதுரையில் வைக்கப்பட்டுள்ளது, நாளை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. சூரியின் தந்தை மறைவால், இன்று நடைபெற இருந்த ‛சரவணன் இருக்க பயமேன்' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேப்போன்று தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக திகழ்ந்த சீர்காழி கோவிந்தராஜனின் மனைவி சுலோச்சனா(80) மூச்சு திணறல் காரணமாக சென்னை, அடையாரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டிருந்தவர், நேற்று இரவு 09.00மணிக்கு சிகிச்சை பலன் இன்றி மறைந்தார். இவரது உடல் சென்னை, மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுலோச்சனாவின் மகன் சீர்காழி சிவசிதம்பரம் பிரபல பாடகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர இயக்குனர் கே.வி.ஆனந்தின் தந்தை கே.எம்.வெங்கடேசன்(74) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மறைந்தார்.

ஒரே நாளில் மூன்று திரைபிரபலங்களின் இல்லத்தில் நிகழ்ந்த சோகம் கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னார்களது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை