தற்கொலை முயற்சி குற்றமல்ல: பார்லி.யில் சட்டம் நிறைவேறியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தற்கொலை முயற்சி குற்றமல்ல: பார்லி.யில் சட்டம் நிறைவேறியது

புதுடெல்லி- வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் மனநலம் பாதிக்கப்படும் போது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே தற்கொலை முயற்சியில் இருந்து மீண்டவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வந்தனர்.   ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுபவர்களை குற்றவாளிகளாக கருதக் கூடாது. மாறாக அவர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.   அண்மையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மன அழுத்தம் தீர்வு காணக் கூடிய பிரச்னையாகும்.   உரிய சிகிச்சையின் மூலம் அதில் இருந்து அனைவரும் விடுபடலாம் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தற்கொலை முயற்சியை குற்ற பட்டியலில் இருந்து நீக்கும் சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

மன நல மசோதா எனப்படும் இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு 134 திருத்தங்களுடன் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மசோதா மூலம் தற்கொலை முயற்சி இனிமேல் குற்ற நடவடிக்கையாக கருதப்பட மாட்டாது.

மாறாக இது போன்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உரிய மன நல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை சட்ட ரீதியாக இந்த மசோதா உறுதி செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எம்பிக்கள் அனைவருக்கும் மத்திய அமைச்சர் ஜே. பி.

நட்டா நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில், இந்த சட்டத்தின் மூலம் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு சட்ட ரீதியான உரிமை அளிக்கிறது.

இனி யாரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதை இந்த சட்டம் தடுக்கும் என்று குறிப்பிட்டார்.

.

மூலக்கதை