வியாபத்தில் முறைகேடு, சிஏஜி அறிக்கையில் உறுதி: முதல்வர் சவுகானை நீக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு காங். கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வியாபத்தில் முறைகேடு, சிஏஜி அறிக்கையில் உறுதி: முதல்வர் சவுகானை நீக்க வேண்டும்  பிரதமர் மோடிக்கு காங். கடிதம்

போபால்- மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த 2007ம் ஆண்டு அரசு பணியிடங்கள் மற்றும் இதர துறைகளுக்கு நியமனம் செய்வதில் தேர்வு நடத்துவதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வியாபம் ஊழல் என்று குறிப்பிடப்படும் இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு முதல் சிறப்பு தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 47க்கும் அதிகமானோர் இந்த முறைகேடு தொடர்பாக மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் சர்மா, ஐபிஎஸ் அதிகாரி ஷிவாரே, சுரங்க அதிபர் சுதீர் சர்மா உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்கள் உள்பட 1800 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்த ஊழலில் முதல்வர் சவுகான், கவர்னர் ராம் நரேஷ் யாதவ், அவரது மனைவி சாதனா, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.



இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் மத்திய கணக்கு தணிக்கை அலுவலர் குழு நடத்திய சோதனையில் வியாபம் மூலம் நியமனம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இந்த அறிக்கையை சுட்டி காட்டி மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் அஜய் சிங் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் சவுகானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், சிஏஜி அறிக்கையில் வியாபம் முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 53 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

55 பேர் மீது வழக்கு உள்ளது.

2 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு நிறுவனங்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

இவை அனைத்தும் சவுகான் பதவி காலத்திலேயே நடந்துள்ளது. மேலும் முறைகேடு நடந்த போது மாநில மருத்துவ கல்வி பொறுப்பையும் சவுகான் வகித்துள்ளார்.

எனவே அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

சுரங்க விவகாரம் தொடர்பாக மன்மோகனை விசாரிக்கும் போது வியாபம் ஊழலில் தொடர்புடைய சவுகானை விசாரிப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சவுகானை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை? அவரிடம் மத்திய அரசு மென்மை போக்கை காட்டுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை