300 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம்: மகாராஷ்டிரா அரசு அமைக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
300 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம்: மகாராஷ்டிரா அரசு அமைக்கிறது

மும்பை- மகாராஷ்டிரா மாநிலம் உருவான தினம் வருகிற மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து 300 அடி உயர கொடி கம்பம் அமைக்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வருகிற மே 1ம் தேதி முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் இக்கொடி கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விடுகிறார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலம் கொல்காபூரில் 300 அடி உயர தேசியக் கொடிகம்பம் அமைக்கப்பட உள்ளது.

இது இந்தியாவின் 2வது உயரமான தேசியக்கொடி கம்பமாக அமையும். இதற்கான அனுமதி அனைத்து தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதில் கட்டப்படும் தேசியக் கொடியின் நீளம் 90 அடி. அகலம் 60 அடி.

தேசிய கொடி பழுதடையும் பட்சத்தில் உடனுக்குடன் மாற்றுவதற்கு ஏதுவாக 3 தேசியக் கொடிகள் வாங்கப்பட்டுள்ளன.

கொடிக்கம்பத்தில் இரவு நேரங்களில் மூவண்ண கொடியின் வெளிச்சத்தை பரப்ப 6 வெளிச்சம் பாய்ச்சும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கொடி கம்பத்தின் மொத்த எடை 24,000 கிலோவாகும். இக்கொடி கம்பம் கொல்காபூரில் உள்ள எஸ்பி குவாட்டர்ஸ் அருகே நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொடியில் சேதம் ஏற்பட்டால் அதனை உடனே அறிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன. இந்திய-பாக் எல்லையில் இந்தியாவின் அத்தாரி என்ற பகுதியில் நாட்டப்பட்டுள்ள தேசியக் கொடி கம்பமே இந்தியாவின் அதிக உயரமான தேசியக் கொடி கம்பமாக உள்ளது.

தற்போது கொல்காபூரில் நாட்டப்பட உள்ள நாட்டின் 2வது உயரமான தேசியக்கொடி கம்பம், மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு பெருமை சேர்க்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


.

மூலக்கதை