பஞ்சாப் தேர்தலில் ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு: தேர்தல் ஆணையத்தில் ஆம்ஆத்மி ஆதாரத்துடன் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சாப் தேர்தலில் ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு: தேர்தல் ஆணையத்தில் ஆம்ஆத்மி ஆதாரத்துடன் புகார்

புதுடெல்லி- பஞ்சாப் தேர்தலில் ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு வேலைகள் நடந்ததற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி சமர்பித்துள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதில் 4ல் பாஜ ஆட்சி அமைத்துள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற இரண்டாவது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி முதன்முறையாக எதிர்கட்சி வரிசையில் இடம் பிடித்துள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஓட்டு எந்திரத்திற்கு போதாத காலம் தொடங்கி விட்டது.

உத்தரபிரதேசத்தில் முன்னாள் மாயாவதி தொடங்கி வைத்த ஓட்டு எந்திர புகார் குறித்த குற்றச்சாட்டு பின்னர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் என படிப்படியாக பரவி தற்போது அனைத்து எதிர்கட்சிகளும் ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. மேலும் ஓட்டு எந்திரங்களை ஹேக் செய்யவும், தகவல்களை திரிக்கவும் முடியும் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.



இதற்கிடையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

8 வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த சூழலில் பஞ்சாபில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளை அகாலி-பாஜ கூட்டணி கட்சிகள் ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து திருப்பி விட்டுள்ளன ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த விளக்கத்தில் உலகத்திலேயே இந்தியாவின் ஓட்டு எந்திரம் தான் எந்த வித தில்லு முல்லுகளும் செய்ய முடியாத அளவுக்கு நம்பக தன்மையும், பாதுகாப்பும் மிக்கவை என்று தெரிவித்திருந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை நம்ப எதிர்கட்சிகள் தயாராக இல்லை.

இதற்கிடையில் பஞ்சாபில் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.

கூடவே அதற்கான ஆதாரங்களையும் சமர்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா கூறுகையில், பஞ்சாபில் ஒரு சில தொகுதிகளில் ஓட்டுக்கு ரசீது முறை அறிமுகம் செய்யப்பட்டது. பெரும்பாலான வாக்குசாவடி உள்ள இடங்களில் எங்களது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை காட்டிலும் குறைவான வாக்குகள் எங்களுக்கு பதிவாகி உள்ளன.

எங்களுக்கு வாக்களிப்பதாக ஏற்கனவே அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். எனவே எங்களது வாக்குகளை அகாலி-பாஜ தங்களுக்கு சாதகமாக ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து  திருப்பி விட்டுள்ளன.

இதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளோம்.

ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ரசீதில் அச்சான வாக்குகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை