மயாமி ஓபன் டென்னிஸ்: கெர்பர், பிளிஸ்கோவா கால் இறுதிக்கு தகுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மயாமி ஓபன் டென்னிஸ்: கெர்பர், பிளிஸ்கோவா கால் இறுதிக்கு தகுதி

நியூயார்க்: மயாமி ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று போட்டி ஒன்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்-அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் எளிதாக வெற்றி பெற்று, 4ம் சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முன்னேறினார். 35 வயதாகும் ரோஜர் பெடரர் காயம் காரணமாக கடந்தாண்டு பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை.

ஆனால் 2017ம் ஆண்டில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். இந்த ஆண்டில் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஜர் பெடரர் 15 வெற்றிகளை பெற்றுள்ளார்.



2005, 2006ம் ஆண்டுகளில் மயாமி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரோஜர் பெடரர், 14ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுடிஸ்டா அகட்டை 4ம் சுற்றில் எதிர்கொள்கிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்-ஜப்பானின் ரிசா ஒசாகி மோதினர்.

இதில், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஏஞ்சலிக் கெர்பர் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அல்லது ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட்சோவாவுடன் மோதுவார்.

மற்றொரு 4ம் சுற்று போட்டியில், 2ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 6-1, 6-4 என்ற செட் கணக்கில், 15ம் நிலையில் உள்ள சக நாட்டு வீராங்கனையான பார்போரா ஸ்டிரைக்கோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அதே நேரத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருசா, டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கிக்கு எதிரான போட்டியில், முதல் செட்டை இழந்திருந்தபோது, தலை மற்றும் உடல் வலி காரணமாக, பாதியில் விலகி கொண்டார்.

இதன் மூலம் கரோலினா வோஸ்னியாக்கி காலிறுதிக்கு முன்னேறினார். 2017ம் ஆண்டில் 7 தொடர்களில் பங்கேற்றுள்ள கரோலினா வோஸ்னியாக்கி 6வது முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு போட்டியில், முன்னாள் உலக நம்பர்-5 வீராங்கனையான செக் குடியரசின் லூசி சபரோவா, 7-6(5), 6-1 என்ற செட் கணக்கில், சுலோவாகியாவை சேர்ந்த 4ம் நிலை வீராங்கனை டொமினிகா சிபுல்கோவாவை வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.


.

மூலக்கதை